2 மகன்களை ஏரியில் தள்ளி கொன்று, பெண்ணும் குதித்து தற்கொலை


2 மகன்களை ஏரியில் தள்ளி கொன்று, பெண்ணும் குதித்து தற்கொலை
x
தினத்தந்தி 1 May 2018 4:01 AM IST (Updated: 1 May 2018 4:01 AM IST)
t-max-icont-min-icon

ராமநகர் அருகே காணாமல் போனதாக தேடப்பட்ட நிலையில் 2 மகன்களை ஏரியில் தள்ளி கொன்று விட்டு பெண்ணும் குதித்து தற்கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநகர்,

ராமநகர் மாவட்டம் தாவரகெரேயை சேர்ந்தவர் அஞ்சன்மூர்த்தி, கூலித் தொழிலாளி. இவரது மனைவி சுஜாதா(வயது 30). இவர்களுக்கு 8 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு நகுல்(6) மற்றும் விஷால்(4) என்ற மகன்கள் இருந்தார்கள். கடந்த மாதம்(ஏப்ரல்) 28-ந் தேதி காலையில் வழக்கம் போல அஞ்சன்மூர்த்தி வேலைக்கு சென்று விட்டார். அன்றைய தினம் மாலையில் தனது கணவரை செல்போனில் தொடர்பு கொண்டு சுஜாதா பேசினார். அப்போது தனக்கு உடல் நிலை சரியில்லை என்றும், அதனால் ஆஸ்பத்திரிக்கு செல்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

உடனே தான் வந்ததும் சேர்ந்து போகலாம் என்று சுஜாதாவிடம் அஞ்சன்மூர்த்தி சொல்லி இருக்கிறார். ஆனால் கணவர் பேச்சை கேட்காமல் சுஜாதா தனது மகன்களை அழைத்துக் கொண்டு வெளியே சென்று விட்டார். வேலை முடிந்து வீட்டிற்கு வந்த அஞ்சன்மூர்த்தி மனைவி, மகன்கள் வீட்டில் இல்லாததால் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்தார். அங்கும் அவர்கள் இல்லை. பின்னர் மாகடி தாலுகா கல்கெரேயில் வசிக்கும் சுஜாதாவின் தாய் வீட்டிற்கு அஞ்சன்மூர்த்தி சென்றார். அங்கும் அவர் வரவில்லை என்று சுஜாதாவின் பெற்றோர் கூறினார்கள்.

இதையடுத்து, தனது மனைவி, மகன்களை அஞ்சன்மூர்த்தி அக்கம்பக்கத்தில் தேடியும், விசாரித்தும் பார்த்தார். ஆனால் அவர்களை பற்றிய எந்த தகவலும் அவருக்கு கிடைக்கவில்லை. பின்னர் நேற்று முன்தினம் மதியம் தாவரகெரே போலீஸ் நிலையத்திற்கு சென்று தனது மனைவியும், மகன்களையும் காணவில்லை என்று கூறி அஞ்சன்மூர்த்தி புகார் அளித்தார். அதே நேரத்தில் மாகடி தாலுகா கல்கெரேயில் உள்ள ஏரி தண்ணீரில் ஒரு பெண்ணின் உடல் மிதப்பதாக மாகடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுபற்றி தாவரகெரே போலீசாருக்கும் தெரியவந்தது.

பின்னர் மாகடி போலீசார் அங்கு சென்று ஏரியில் இருந்து பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது அது காணாமல் போனதாக தேடப்பட்ட சுஜாதா தான் என்பது தெரியவந்தது. மேலும் சுஜாதாவின் மகன்களும் ஏரி தண்ணீரில் மூழ்கி இருக்கலாம் என்று கருதி, தீயணைப்பு படைவீரர்கள் வரவழைக்கப்பட்டு தேடும் பணி நடைபெற்றது. பின்னர் நேற்று முன்தினம் இரவில் சுஜாதாவின் மகன்கள் நகுல், விஷாலின் உடல்களை ஏரியில் இருந்து தீயணைப்பு படைவீரர்கள் மீட்டார்கள்.

சுஜாதா, தனது 2 மகன்களையும் ஏரியில் தள்ளி கொலை செய்துவிட்டு, பின்னர் அவரும் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அவர்களது உடல்களை பார்த்து அஞ்சன்மூர்த்தி கதறி அழுதார். இதற்கிடையில், அஞ்சன்மூர்த்தியும், சுஜாதாவும் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்ததாகவும், அவர்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் மாகடி போலீசாரிடம் சுஜாதாவின் பெற்றோர் தெரிவித்தனர்.

இதனால் என்ன காரணத்திற்காக 2 மகன்களை கொன்றுவிட்டு, சுஜாதா தற்கொலை செய்து கொண்டார்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து மாகடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story