பெங்களூரு நகரம் 3 குண்டர்களின் பிடியில் உள்ளது அமித்ஷா பரபரப்பு பேச்சு


பெங்களூரு நகரம் 3 குண்டர்களின் பிடியில் உள்ளது அமித்ஷா பரபரப்பு பேச்சு
x
தினத்தந்தி 1 May 2018 4:11 AM IST (Updated: 1 May 2018 4:11 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு நகரம் 3 குண்டர்களின் பிடியில் உள்ளது என்றும், இதனால் மக்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்றும் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா பரபரப்பாக பேசினார்.

கோலார் தங்கவயல்,

கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற 12-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி நேற்று கோலார் தங்கவயல் ராபர்ட்சன்பேட்டை அம்பேத்கர் ரோட்டில் உள்ள மலையாளி மைதானத்தில் நடந்த பா.ஜனதா கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா பேசியதாவது:-

கர்நாடகத்தில் மீண்டும் பா.ஜனதாவை ஆட்சி கட்டிலில் அமர வைக்க மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகிறேன். கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு ஊழல் செய்வதில் இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது. இது தான் காங்கிரஸ் அரசின் சாதனை ஆகும். ஊழல் பற்றி பேசுவதற்கு ராகுல்காந்திக்கு எந்த தகுதியும் கிடையாது. நாட்டில் 10 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில், அவர்கள் ஊழலுக்கு எதிராக போராடினார்களா?. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் தான் பீகாரில் மாட்டுத்தீவன ஊழல் நடந்தது. தற்போது பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு, மாட்டுத்தீவன ஊழலில் ஈடுபட்ட லாலு பிரசாத் யாதவை சிறையில் அடைத்துள்ளது. ராகுல்காந்தி 2 தலை பாம்பு போல, மாறுபட்ட கருத்துகளை தெரிவித்து வருகிறார். ஊழலை ஒழிப்பதாக கூறும் ராகுல்காந்தி, மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற லாலு பிரசாத் யாதவுடன் கூட்டணி வைக்க முயற்சித்து வருகிறார். இதில் இருந்தே ராகுல்காந்தியின் உண்மை முகம் தெரியவரும்.

சித்தராமையா தேர்தல் பொதுக்கூட்டங்களில், மத்தியில் மோடி தலைமையிலான அரசு கர்நாடகத்தை வஞ்சித்து வருவதாகவும், வளர்ச்சி பணிகளுக்கு போதிய நிதி வெளியிடவில்லை என்றும் குற்றம்சாட்டுகிறார். இந்த பொதுக்கூட்டத்தின் வாயிலாக ஒரு புள்ளி விவரத்தை நான் வெளியிடுகிறேன். அதாவது, மத்தியில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, கர்நாடக மாநிலத்துக்கு 13-வது நிதி ஆணையத்தின் கீழ் ரூ.88 ஆயிரத்து 583 கோடி நிதி ஒதுக்கி இருந்தார். ஆனால், மத்தியில் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் 14-வது நிதி ஆணையத்தின் கீழ் கர்நாடக மாநிலத்துக்கு எப்போதும் இல்லாத அளவில் ரூ.2 லட்சத்து 19 ஆயிரத்து 506 கோடி நிதி ஒதுக்கி உள்ளார். பிரதமர் மோடி கர்நாடகத்துக்கு வழங்கிய வளர்ச்சி நிதியை இரட்டிப்பு செய்துள்ளார்.

கோலார் தங்கவயலுக்கு மிக அருகில் பெங்களூரு நகரம் உள்ளது. தற்போது பெங்களூரு நகர் குண்டர்கள், மாபியாக்களின் கைகளில் உள்ளது. அவர்களுடைய பெயர்களை சொல்ல எனக்கு பயம் இல்லை. அதாவது, பெங்களூரு நகரம் மந்திரிகள் ரோஷன் பெய்க், கே.ஜே.ஜார்ஜ், ஹாரீஸ் எம்.எல்.ஏ. ஆகிய 3 குண்டர்களின் பிடியில் தான் உள்ளது. இவர்களால் மக்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை. இவர்களின் கைகளில் இருந்து பெங்களூரு நகரத்தை மீட்க மக்கள் எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா அரசு ஆட்சிக்கு வர வேண்டும். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை. 15-ந்தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு இவர்கள் 3 பேரின் கைகளில் இருந்து பெங்களூரு நகர் விடுபடும். அப்போது தான் மக்கள் நிம்மதியாக இருப்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story