பால் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் சீமைக்கருவேல மரங்களை போட்டு போராட்டம்


பால் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் சீமைக்கருவேல மரங்களை போட்டு போராட்டம்
x
தினத்தந்தி 1 May 2018 4:23 AM IST (Updated: 1 May 2018 4:23 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் அதிகாரி வராததால் பால் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் சீமைக்கருவேல மரங்களை போட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

மணப்பாறை,

மணப்பாறை அருகே பால் கூட்டுறவு சங்கத்தில் வேட்புமனு வழங்க தேர்தல் அதிகாரி வராததால் ஆத்திரமடைந்த அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் சீமைக்கருவேல மரங்களை அலுவலகத்தில் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பன்னபட்டியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இங்கு தேர்தலையொட்டி நேற்று முதல் வேட்புமனுக்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை வேட்பு மனுக்களை பெற தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மற்றும் சங்க உறுப்பினர்கள் கூட்டுறவு கடன் சங்கத்திற்கு வந்தனர்.

ஆனால் அந்த சங்கத்திற்கு தேர்தல் அதிகாரி வராததால் அலுவலகமும் பூட்டிக்கிடந்தது. வேட்புமனு வாங்க வந்தவர்கள் நீண்ட நேரம் காத்திருந்தும் யாரும் வரவில்லை. இதனால் மாவட்ட தி.மு.க. பொருளாளரும், பன்னபட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான என்.கோவிந்தராஜன் தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் மற்றும் சங்க உறுப்பினர்கள் திடீரென சங்கத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தேர்தல் அதிகாரியை காணவில்லை, கண்டுபிடித்து தாருங்கள் என்று ஒரு பேப்பரில் எழுதி வைத்திருந்தனர்.

இதுமட்டுமின்றி சிலர் அருகே இருந்த சீமைக்கருவேல மரங்களை வெட்டி எடுத்து வந்து, கூட்டுறவு சங்க வாசலில் போட்டு யாரும் உள்ளே செல்ல முடியாத அளவில் அடைத்து போராட்டம் நடத்தினர். சங்க அலுவலகம் ஏற்கனவே பூட்டப்பட்டிருந்த நிலையில், அதில் மேலும் ஒரு பூட்டு போட்டு பூட்டினர்.

பின்னர் அவர்கள், முறையாக தேர்தலை நடத்த வேண்டும், தேர்தல் அதிகாரி உடனடியாக வர வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதையடுத்து அங்கு வந்த புத்தானத்தம் போலீசார், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உதவியுடன் சீமைக்கருவேல மரங்களை அகற்றினர்.

இதேபோல் மணப்பாறையை அடுத்த பொன்முச்சந்தியில் உள்ள ஆனாம்பட்டி பால் கூட்டுறவு சங்கத்திற்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராயம்பட்டி ராமசாமி தலைமையில் பல்வேறு கட்சியினர் சென்று வேட்பு மனுக்களை பெற முயன்றனர். ஆனால் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் யாரும் இல்லாததால், அவர்கள் கண்டன கோஷங் களை எழுப்பினர். பின்னர் ஆட்டுக்குட்டியிடம் மனு கொடுத்தனர்.இதையடுத்து அங்கிருந்து புறப்பட்டு சென்ற அவர்கள், மணப்பாறையில் உள்ள பால் கூட்டுறவு சங்கத்திற்கு சென்று அங்கு வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

Next Story