திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் அரசு போக்குவரத்து கழக அதிகாரிக்கு கொலை மிரட்டல்


திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் அரசு போக்குவரத்து கழக அதிகாரிக்கு கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 1 May 2018 4:32 AM IST (Updated: 1 May 2018 4:32 AM IST)
t-max-icont-min-icon

அரசு போக்குவரத்து கழக அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த தனியார் பஸ் புரோக்கர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி,

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த தனியார் பஸ் புரோக்கர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினத்தை சேர்ந்தவர் மணி(வயது 56). இவர் திருச்சி அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் மணி பணியில் இருந்தார். அப்போது தனியார் பஸ்சில் பயணிகளை ஏற்றும் நோக்கத்தில் புரோக்கர்கள் சிலர், அரசு பஸ் மற்றும் விரைவு பஸ்களில் அமர்ந்திருந்த பயணிகளை அழைத்தனர். திருச்சியில் இருந்து சென்னைக்கு தனியார் பஸ்சில் சென்றால் விரைவாக சென்று விடலாம் என்றும், அரசு பஸ்சில் உள்ள அதே கட்டணத்தில்தான் டிக்கெட் வழங்கப்படும் என்றும் அவர்கள், பயணிகளிடம் கூறினர்.

தனியார் பஸ் புரோக்கர் களின் இந்த செயலை, உதவி மேலாளர் மணி கண்காணித்தபடி இருந்தார். இந்நிலையில் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட தயாரான அரசு விரைவு பஸ்சில் அமர்ந்திருந்த சில பயணிகளை புரோக்கர்கள் அழைத்துக்கொண்டு, பஸ்சில் இருந்து கீழே இறங்கினர். இதைக்கண்ட மணி, அந்த புரோக்கர்களிடம், ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறீர்கள்? என்று தட்டிக்கேட்டார். அதற்கு அவர்கள், அப்படித்தான் செய்வோம் என்று அச்சுறுத்தும் வகையில் பேசியதுடன், அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து மணி, திருச்சி கண்டோன்மெண்ட் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் பஸ் புரோக்கர்களான பாலக்கரை ரெட்டைப்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பிரபு(42), பெரியமிளகுபாறையை சேர்ந்த குமார் என்கிற ராஜ் குமார்(45), கோரிமேட்டை சேர்ந்த சரவணக்குமார்(36), விமான நிலையம் இந்திராநகரை சேர்ந்த சின்னதம்பி என்கிற சுரேந்தர்(47) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

கைதானவர்கள் மீது கொலை மிரட்டல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கைதான 4 பேரும், திருச்சி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் ஆம்னி பஸ்களில் பயணிகளை ஏற்றிவிடும் புரோக்கர்களுக்கு ஒரு டிக்கெட்டுக்கு குறிப்பிட்ட அளவு கமிஷன் கொடுக்கப் படுகிறது. எனவே, கமிஷன் பெறும் ஆர்வத்தில் அரசு பஸ்சில் செல்லும் பயணிகளை விடாது துரத்தி சென்று பேசி தனியார் மற்றும் ஆம்னி பஸ்களுக்கு அழைத்து செல்வது வாடிக்கையாக உள்ளது. எனவே, பஸ் நிலையத்தில் புரோக்கர்களின் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களின் வேண்டுகோளாக உள்ளது.

Next Story