தூங்கிய பெண்களிடம் நகை பறிப்பு; 2 பேர் கைது


தூங்கிய பெண்களிடம் நகை பறிப்பு; 2 பேர் கைது
x
தினத்தந்தி 1 May 2018 4:35 AM IST (Updated: 1 May 2018 4:35 AM IST)
t-max-icont-min-icon

சமயநல்லூர் அருகே தூங்கிய பெண்களிடம் நகை பறித்த வழக்கில் போலீசார் 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகை, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

வாடிப்பட்டி,

சமயநல்லூர் அருகே தேனூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சிதம்பரநாதன். இவருடைய மனைவி வினோதியா (வயது 29). இவர் கடந்த வாரம் காற்றுக்காக கதவை திறந்து வைத்து வாசல் படியில் தூங்கினார். அப்போது அவரது கழுத்திலிருந்த 3¼ பவுன் நகையை 2 மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

அதேபோல் அங்குள்ள அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுந்தரராஜன் மனைவி தெய்வஜோதி (54) என்பவரின் கழுத்திலிருந்து 1¾ பவுன் நகையை பறித்தனர். அப்போது போராடிய அவரை கத்தியால் குத்திவிட்டு நகையை பறித்து கொண்டு சென்றனர். இதுகுறித்து சமயநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து 2 மர்ம நபர்களை தேடிவந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் சமயநல்லூர் வைகை நகர் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துபாண்டி தலைமையில் போலீசார் வாகன சோதனை செய்தனர் அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது சத்திரப்பட்டி கடவூரை சேர்ந்த மைதீன் மகன் ஜாகீர்உசேன்(வயது 19), அவனியாபுரம் துக்காராம் தெருவை சேர்ந்த கோபிநாத் மகன் மணிகண்டன் (19) என்பது தெரியவந்தது.

மேலும் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில்கூறியதை தொடர்ந்து, போலீஸ் நிலையம் கொண்டு தீவிரமாக விசாரிக்கப்பட்டனர். அதில் தேனூரில் 2 பெண்களிடம் நகைகளை பறித்ததை ஒப்புக்கொண்டனர். அதைத்தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 4½ பவுன் நகை, மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Next Story