சென்னையில் டிசம்பர் வரை குடிநீர் பிரச்சினை ஏற்படாது அமைச்சர் வேலுமணி பேட்டி


சென்னையில் டிசம்பர் வரை குடிநீர் பிரச்சினை ஏற்படாது அமைச்சர் வேலுமணி பேட்டி
x
தினத்தந்தி 2 May 2018 4:45 AM IST (Updated: 2 May 2018 12:03 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் டிசம்பர் மாதம் வரை குடிநீர் பிரச்சினை ஏற்படாது என அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.

ஆலந்தூர்,

சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் வேலுமணி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது.

தமிழகத்தில் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. குடிநீர் பிரச்சினையை சமாளிக்க முதல்–அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மாநிலம் முழுவதும் குடிநீர் பிரச்சினையை போக்க தேவையான நிதி ஒதுக்கப்படும். நீர் ஆதாரம் உள்ள பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படுகிறது. சென்னையில் டிசம்பர் மாதம் வரையில் தண்ணீர் பிரச்சினை ஏற்படாது. 

தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாலேயே உள்ளாட்சி தேர்தல் நிறுத்தப்பட்டது. உள்ளாட்சி தேர்தலுக்காக வார்டு வரைமுறைப்படுத்தும் பணி முடிந்துவிட்டது. அதன்பின்பும் சில மாவட்டங்களில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அந்த எதிர்ப்புகளை சீர்செய்யும் பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது.

அதன்பின்பு அதற்கான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து தேர்தல் நடத்த உரிய ஆணை பெறப்படும்.

உள்ளாட்சி தேர்தல் நடக்கவில்லை என்றாலும், உள்ளாட்சி வளர்ச்சி பணிகள் எந்தவித தடையும் இன்றி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உள்ளாட்சி தேர்தல் நடக்காத நிலையில் வளர்ச்சி பணிகளுக்காக மத்திய அரசிடம் இருந்து ஒரு கட்ட நிதி பெறப்பட்டு உள்ளது. முதல்–அமைச்சர் டெல்லிக்கு செல்லும் போது அடுத்தகட்ட நிதி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்.  இவ்வாறு அவர் கூறினார்.

Next Story