தமிழுக்கு அதிகம் செய்தது யார்? விவாதம் நடத்த மு.க.ஸ்டாலின் தயாரா? தமிழிசை சவுந்தரராஜன் சவால்


தமிழுக்கு அதிகம் செய்தது யார்? விவாதம் நடத்த மு.க.ஸ்டாலின் தயாரா? தமிழிசை சவுந்தரராஜன் சவால்
x
தினத்தந்தி 2 May 2018 4:15 AM IST (Updated: 2 May 2018 12:22 AM IST)
t-max-icont-min-icon

தமிழுக்கு யார் அதிகம் செய்தார்கள் என விவாதம் நடத்த மு.க.ஸ்டாலின் தயாரா? என்று தமிழிசை சவுந்தரராஜன் சவால் விடுத்து உள்ளார்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த நன்மங்கலம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடந்தது. பரங்கிமலை வட்டார வளர்ச்சி மண்டல துணை அலுவலர் சுந்தர்ராஜ், கிராம நிர்வாக அதிகாரி பாரதி, ஊராட்சி செயலாளர் வேலுச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார்.

கூட்டத்தில், ஏரியை தூர் வாரவேண்டும், குப்பைகள் அகற்றப்பட வேண்டும். மழைநீர் கால்வாய் அமைக்க தோண்டப்பட்ட பள்ளங்களை சீரமைத்து கால்வாய்கள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். பின்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது.

பா.ஜனதா கட்சியில் தமிழ் உணர்வாளர்கள் இல்லை என்றும், தமிழை புறக்கணிப்பதாகவும் கூறி தமிழர்களிடம் இருந்து பா.ஜனதாவை பிரிக்க சூழ்ச்சி நடக்கிறது. தேசிய கட்சியாக இருந்தாலும் தமிழ் உணர்வுடன் இருக்கும் பா.ஜனதா, தமிழர்களிடம் அங்கீகாரம் பெற்று விடக்கூடாது என்ற உள்நோக்கத்துடன் சிலர் செயல்படுகின்றனர்.

தமிழுக்கும் பா.ஜனதாவுக்கும் சம்பந்தம் இல்லை என கூறும் தி.மு.க. செய்ததைவிட தமிழுக்கு பா.ஜனதா அதிகமாக செய்து உள்ளது. தமிழில் எத்தனை விருது இருக்கிறது?, செம்மொழி ஆய்வு எப்படி நடக்கிறது?, யார் விருதை வாங்கினார்கள் என்று தெரியாமல் மு.க.ஸ்டாலின் அறிக்கை தருகிறார். தமிழுக்கு யார் அதிகம் செய்துள்ளார்கள் என்று என்னிடம் விவாதம் நடத்த மு.க.ஸ்டாலின் தயாரா?.

உள்ளாட்சிகளில் பணிகள் நடக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தமிழக அரசிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது. நீண்டகாலமாக உள்ளாட்சிகளில் செய்யப்பட வேண்டிய பணிகளை தி.மு.க., அ.தி.மு.க. செய்யாததால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

கோவிலம்பாக்கம் ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் வட்டார வளர்ச்சி துணை அலுவலர் ரவிக்குமார், ஊராட்சி செயலாளர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கோவிலம்பாக்கத்தில் உள்ள குப்பைக்கிடங்கில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Next Story