சொத்து தகராறில் அண்ணனை கத்தியால் குத்திக்கொன்ற வாலிபர் கைது


சொத்து தகராறில் அண்ணனை கத்தியால் குத்திக்கொன்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 2 May 2018 4:15 AM IST (Updated: 2 May 2018 12:56 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் அருகே சொத்து தகராறில் அண்ணனை கத்தியால் குத்திக்கொலை செய்த வாலிபரையும், அதற்கு உடந்தையாக இருந்த தந்தையையும் போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் அருகே உள்ள லாடபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை(வயது 65). கல் உடைக்கும் தொழிலாளி. இவருக்கு ராஜா(28), தர்மதுரை(26) என 2 மகன்கள். இதில் தர்மதுரை தனது தந்தை ஏழுமலை வீட்டில், தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார். ராஜா தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அப்பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் ராஜா, ஏழுமலை வீட்டிற்கு சென்றார். அங்கு அவரிடம் தனக்கு சேர வேண்டிய சொத்துகளை பிரித்து தருமாறு கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது ஆத்திரத்தில் ராஜா தனது தந்தை ஏழுமலை மற்றும் தாய் செல்வராணி(50) ஆகியோரை தாக்கினார். இதை தர்மதுரை தட்டிக்கேட்டார். இதனால் அண்ணன், தம்பி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தர்மதுரை, கத்தியால் ராஜாவை குத்தினார். இதில் பலத்த காயமடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அண்ணனை கொலை செய்த தர்மதுரை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்ததாக தந்தை ஏழுமலை ஆகியோரை கைது செய்து, பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சொத்து தகராறில் அண்ணனை, தம்பியே கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story