ஊட்டியில் பலத்த மழை நகராட்சி தடுப்புசுவர் இடிந்து விழுந்ததில் வாகனங்கள் சேதம்


ஊட்டியில் பலத்த மழை நகராட்சி தடுப்புசுவர் இடிந்து விழுந்ததில் வாகனங்கள் சேதம்
x
தினத்தந்தி 2 May 2018 5:00 AM IST (Updated: 2 May 2018 12:56 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் பலத்த மழையால் நகராட்சி தடுப்புசுவர் இடிந்து விழுந்ததில் வாகனங்கள் சேதமடைந்தன.

ஊட்டி,

ஊட்டியில் பெய்த பலத்த மழை காரணமாக நகராட்சி தடுப்புசுவர் இடிந்து விழுந்தது. இதனால் கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் சேதம் அடைந்தன.

ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழை காரணமாக காந்தல் குருசடி பகுதியில் நகராட்சி தடுப்புசுவர் இடிந்து விழுந்ததில் தடுப்பு சுவர் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 கார்கள், ஒரு சரக்கு வாகனம், 8 மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந்தன. இரவு நேரம் என்பதால் அந்த பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி தாசில்தார் தினேஷ்குமார் மற்றும் நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ரவி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர்.

தலைகுந்தா-கல்லட்டி பகுதியில் மரம் ஒன்று முறிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த மரத்தை வெட்டி அகற்றினார்கள். கல்லட்டி பகுதிகளில் 5 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் அந்த வீடுகளில் குடியிருந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

ஊட்டி பாலாடா- பேலிதளா சாலை, தலைகுந்தா-கன்னிமரா சாலை, அவலாஞ்சி சாலைகளில் சேறு நிறைந்து காணப்பட்டது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் முருகன் தலைமையிலான நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொக்லைன் எந்திரத்தின் மூலம் சாலையில் தேங்கி இருந்த சேற்றை அகற்றினார்கள். அதன்பிறகு வாகன போக்குவரத்து நடைபெற்றது.

ஊட்டி-கூடலூர் நெடுஞ்சாலையில் நள்ளிரவில் மழை காரணமாக மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மரங்களை அகற்றிய பின்பு வாகனங்கள் இயக்கப்பட்டது. ஊட்டியில் பெய்த மழை காரணமாக கோரிசோலா, மார்லிமந்து, தொட்டபெட்டா, கோடப்பமந்து ஆகிய குடிநீர் வழங்கும் அணைகளின் நீர்மட்டம் 2 அடி வரை உயர்ந்து உள்ளது.

Next Story