மே தினத்தையொட்டி கிராம சபை கூட்டம்


மே தினத்தையொட்டி  கிராம சபை கூட்டம்
x
தினத்தந்தி 2 May 2018 5:00 AM IST (Updated: 2 May 2018 1:05 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் மே தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 கிராம ஊராட்சிகளிலும் நேற்று மே தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடந்தது. நாமக்கல் அருகே உள்ள வகுரம்பட்டி ஊராட்சியின் கிராமசபை கூட்டம் பொன்விழா நகர் சமுதாய கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுமதி தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் (பொறுப்பு) வடிவேல் முன்னிலை வகித்தார்.

இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்வம், சுகாதார ஆய்வாளர் முகமது ரபி, ஊராட்சியின் முன்னாள் துணை தலைவர் கண்ணம்மாள் பெரியசாமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்குகாய்ச்சலை தடுப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் பிரதமரின் சுகாதார பாதுகாப்பு திட்டம் குறித்தும் பொதுமக்களுக்கு எடுத்து கூறப்பட்டது.

திருச்செங்கோடு ஒன்றியம் சித்தாளந்தூர் ஊராட்சியில் மே தினத்தையொட்டி கிராமசபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி செயலர் மாதேஸ்வரன் தலைமை தாங்கினார். ஊராட்சி சுகாதார ஆய்வாளர் குருசாமி, மக்கள் பாதை அமைப்பின் ஒன்றிய பொறுப்பாளர் வஜ்ரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மகளிர் குழுவினர், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அம்மன் கோவில் காடு பகுதியில் ஆழ்துளை கிணறு இருந்தும் பல மாதங்களாக மோட்டார் பழுது என கூறி தண்ணீர் வழங்க மறுக்கிறார்கள். மோட்டாரை பழுது பார்த்து உடனடியாக தண்ணீர் வழங்க வேண்டும். ஊராட்சியில் உள்ள 27 ஆழ்துளை கிணறுகளில் 20-ல் தண்ணீர் இருந்தும் ஊராட்சியில் நிதி இல்லை என கூறி முறையாக தண்ணீர் வினியோகம் செய்வதில்லை. ஊராட்சியில் உள்ள 9 வார்டுகளிலும் தேங்கி உள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

வெண்ணந்தூர் ஊராட்சி அலவாய்பட்டி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் வளாகத்தில் மே தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வெண்ணந்துார் வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திராணி தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் குணசேகரன் வரவேற்று பேசினார். இதில் பொறியாளர் பூபதி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கனகராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மழைக்காலங்களில் வீடுகள் முன்பு தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாமல் பாதுகாக்க வேண்டும். அந்தந்த வீடுகளில் சேறும் குப்பை, கழிவு பொருட்களை குப்பை தொட்டியில் போட வேண்டும். மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து பொதுமக்களுக்கு விளக்கி கூறினர்.

நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள 18 ஊராட்சிகளில் மே தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. தொப்பம்பட்டி, தொ.ஜேடர்பாளையம், மங்களபுரம், முள்ளுக்குறிச்சி, ஆயில்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகளில் மண்டல அலுவலர் வெங்கடாசலம், வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தா மற்றும் அரசு அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

Next Story