சிறுமுகை அருகே விபத்து கார்கள் நேருக்குநேர் மோதல்; தாய்-மகள் பரிதாப பலி


சிறுமுகை அருகே விபத்து கார்கள் நேருக்குநேர் மோதல்; தாய்-மகள் பரிதாப பலி
x
தினத்தந்தி 2 May 2018 4:15 AM IST (Updated: 2 May 2018 1:09 AM IST)
t-max-icont-min-icon

சிறுமுகை அருகே விபத்து கார்கள் நேருக்குநேர் மோதலில் தாய்-மகள் பரிதாப உயிரிழந்தனர்.

மேட்டுப்பாளையம்,

சிறுமுகை அருகே கார்கள் நேருக்கு நேர் மோதியதில் தாய்-மகள் பரிதாபமாக இறந்தனர். மேலும் 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை வெள்ளமடையை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 41). இவர் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் காசாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சந்திரபிரியா (36). இவர்களுக்கு அஸ்ரிதா (2), ஹார்விக் (2), ஆகிய இரட்டை குழந்தைகள் உள்ளனர்.

நேற்று பகல் வெங்கடேசன் தனது குடும்பத்தினருடன் காரில் ஈரோடு மாவட்டம் பண்ணாரி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். காரை வெள்ளமடையை சேர்ந்த சம்பத்குமார் (37) என்பவர் ஓட்டினார். வெங்கடேசன் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்து விட்டு மீண்டும் ஊருக்கு காரில் புறப்பட்டார்.

பகல் 2.20 மணிக்கு சிறுமுகை சத்தி மெயின் ரோடு ஓதிமலை பிரிவு அருகே கார் வந்துகொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த மற்றொரு கார் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் ஒரு கார் ரோட்டோரத்தில் உள்ள பள்ளத்தில் சாய்ந்தது. இதில் 2 கார்களின் முன் பகுதியும் நொறுங்கின. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனே சிறுமுகை போலீசார் மற்றும் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே அவர்கள் விரைந்து வந்து காரின் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்த வெங்கடேசன், மனைவி சந்திரபிரியா, மகள் அஸ்ரிதா, மகன் ஹார்விக் மற்றும் கார் டிரைவர் சம்பத்குமார் ஆகியோரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சந்திரபிரியா, மகள் அஸ்ரிதா ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். வெங்கடேசன் அவரது மகன் ஹார்விக் மற்றும் கார் டிரைவர் சம்பத்குமார் ஆகிய 3 பேர் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதே போல் மற்றொரு காரில் வந்தவர்கள் கோபி வேட்டைக்காரன்பேட்டையை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் மேட்டுப்பாளையம் அருகே உள்ள வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு ஊருக்கு திரும்பி செல்லும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் கார் டிரைவர் ரவி (36) குணாளன் (70), இவருடைய மனைவி தமிழ்செல்வி (60) சரவணன் (40) சங்கீதா (34) அமிர்தானி (2), நந்தினி (12) மணிமேகலை (50) ஆகிய 8 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த 11 பேரும் சத்தியமங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. விபத்தில் உயிரிழந்த தாய், மகள் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுத காட்சி காண்போர் மனதை உருக்குவதாக இருந்தது. இது குறித்து சிறுமுகை போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story