கவுந்தப்பாடி அருகே தென்னை மரம் விழுந்து பெண் சாவு


கவுந்தப்பாடி அருகே தென்னை மரம் விழுந்து பெண் சாவு
x
தினத்தந்தி 2 May 2018 4:00 AM IST (Updated: 2 May 2018 1:26 AM IST)
t-max-icont-min-icon

கவுந்தப்பாடி அருகே சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் தென்னை மரம் விழுந்ததில் பெண் இறந்தார். அவருடைய கணவர் படுகாயம் அடைந்தார்.

கவுந்தப்பாடி, 

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள மேற்கு குட்டிபாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 31). இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் உற்பத்தி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஆனந்தி (28). இவர்களுடைய மகள்கள் தாரிகா (6), பவுசிகா (2). இவர்கள் திருப்பூரில் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் மேற்கு குட்டிபாளையத்தில் உள்ள கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த கோவில் விழாவில் கலந்து கொள்வதற்காக ரமேஷ் குடும்பத்துடன் மேற்கு குட்டிபாளையத்தில் உள்ள தனது வீட்டுக்கு வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டுக்குள் ஆனந்தி மற்றும் அவருடைய 2 மகள்களும் படுத்து தூங்கி கொண்டிருந்தனர்.

வீட்டுக்கு வெளியே கட்டிலில் ரமேஷ் படுத்து தூங்கினார். இரவு 10 மணி அளவில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் வீட்டின் உள்ளே தூங்கி கொண்டிருந்த ஆனந்தி வெளியே வந்து ரமேசை வீட்டுக்குள் வந்து தூங்குங்கள் என்று அழைத்தார். அப்போது வீட்டின் முன்பு இருந்த தென்னை மரம் எதிர்பாராதவிதமாக வேருடன் சாய்ந்து ஆனந்தி மற்றும் ரமேஷ் மீது விழுந்தது.

இதில் சம்பவ இடத்திலேயே ஆனந்தி பரிதாபமாக இறந்தார். ரமேஷ் படுகாயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் ரமேசை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

Next Story