மே தின ஊர்வலத்தை தொடங்கி வைத்த ஜி.கே.மணி பேட்டி


மே தின ஊர்வலத்தை தொடங்கி வைத்த ஜி.கே.மணி பேட்டி
x
தினத்தந்தி 2 May 2018 5:00 AM IST (Updated: 2 May 2018 1:31 AM IST)
t-max-icont-min-icon

ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று ஈரோட்டில் மே தின ஊர்வலத்தை தொடங்கி வைத்த பா.ம.க.தலைவர் ஜி.கே.மணி கூறினார்.

ஈரோடு, 

ஈரோடு மாவட்ட பாட்டாளி தொழிற்சங்கம் சார்பில் நேற்று தொழிலாளர் தினத்தையொட்டி மே தின ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை தொடங்கி வைக்க பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி நேற்று ஈரோடு வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

மே தினம் தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. தொழிலாளர் தினத்தை கொண்டாடுவதன் மூலம் அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். தொழிலாளர் சட்டங்கள், தொழிலாளர்கள் அமைப்புகள் ஏராளம் இருக்கின்றன.

ஆனால் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றனவா?. தொழிலாளர் சட்டங்கள் அதிகாரத்துறையினரால் காலில் போட்டு நசுக்கப்படுகின்றன. தொழிலாளர்கள் அடக்கு முறைக்கு ஆளாகிறார்கள். தொழிற்சாலை தொழிலாளர்கள், விவசாயிகள், நெசவாளர்கள், மீன்பிடி தொழிலாளர்கள் என்று அனைத்து தரப்பினரும் தொழிலாளர்கள்தான். இவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படாமல் கிடைக்க வேண்டும்.

மத்திய-மாநில அரசு பொதுத்துறை நிறுவனங்களில் கூட இன்று பல ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை செய்து வருபவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர். ஒப்பந்த தொழிலாளர்கள் என்ற பெயரில், குறைந்த ஊதியம் அளிக்கப்படுகிறது. ஒப்பந்த தொழிலாளர்கள் இருக்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறுகிறது. ஆனால் 12 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு பொதுத்துறை நிறுவனங்களில் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை செய்பவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. ஊதிய உயர்வு இல்லை. பணி பாதுகாப்பு இல்லை. தமிழ்நாட்டில் தமிழ்நாடு மின்சார வாரியம், அரசு போக்குவரத்துக்கழகம், சர்க்கரை ஆலைகள், நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறைகளில் ஒப்பந்த முறையில் வேலை செய்பவர்களுக்கு பணி பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது.

தொழிலாளர் சட்டங்கள், தொழிலாளர் உரிமைகள் வெறும் ஏட்டளவில் மட்டும் இல்லாமல் நடைமுறைக்கு வரவேண்டும். ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும்.

அதே நேரம், நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் ஒரு கோடி இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். 86 லட்சம் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்து இருக்கிறார்கள். வேலைவாய்ப்பு உருவாக்கும் தொழிற்சாலைகளும் வளர்ச்சி அடையவில்லை. இந்த சூழலில் தமிழ்நாட்டில் எந்த வேலையாக இருந்தாலும் வட இந்தியர்களுக்கு வாய்ப்பு அளிப்பதை விட்டு, நமது ஊரை சேர்ந்தவர்களுக்கு வேலையில் முன்னுரிமை அளிக்க வேண்டும். முறையாக வேலை வாய்ப்பு வழங்கப்படுவதை தமிழக அரசு கண்காணிக்க வேண்டும்.

பின்னர் ஊர்வலம் நடந்தது. ஈரோடு வீரப்பன்சத்திரம் சி.என்.சி. கல்லூரி அருகே தொடங்கிய ஊர்வலத்துக்கு தொழிற்சங்க மாவட்ட தலைவர் அ.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். அய்யன்துரை, குருசாமி, பெரியசாமி, சசிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப்பொதுச்செயலாளர்கள் பொ.வை.ஆறுமுகம், மு.வேலுச்சாமி ஆகியோர் கட்சி கொடி ஏற்றி வைத்தனர். சங்க உறுப்பினர்களுக்கு மாநில துணைத்தலைவர் எஸ்.எல்.பரமசிவம், நிர்வாகக்குழு ஒருங்கிணைப்பாளர் எம்.பி.வெங்கடாசலம் ஆகியோர் புதிய துண்டுகள் வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டு ஊர்வலத்தை தொடங்கி வைத்து நடந்து சென்றார். ஊர்வலம் வீரப்பன்சத்திரம், சுவஸ்திக் கார்னர், எல்லை மாரியம்மன் கோவில், புதுமஜீத் வீதி வழியாக ஆர்.கே.வி.ரோடு பகுதியில் முடிவடைந்தது.

ஊர்வலத்தில் மாநில துணைத்தலைவர் என்.ஆர்.வடிவேல், மாநில இளைஞர் அணி செயலாளர் பி.வி.செந்தில், மாவட்ட செயலாளர்கள் முத்துக்குமார், எஸ்.சி.ஆர்.கோபால், எஸ்.பழனிச்சாமி, எஸ்.ஆர்.ராஜு, மத்திய மாவட்ட செயலாளர் கே.எஸ்.கிருபாகரன், மாநில சிறுபான்மை நலச்செயலாளர் ஷேக்முகைதீன், வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் பரமேஸ்வரன், அரசு போக்குவரத்துக்கழக மண்டல தலைவர் அருள்குமார், பொதுச்செயலாளர் முருகேசன், டாஸ்மாக் தொழிற்சங்க தலைவர் கருணாகரன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக பாட்டாளி தொழிற்சங்க ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் கி.முனியப்பன் வரவேற்றார். முடிவில் மத்திய மாவட்ட பொருளாளர் பி.சரவணக்குமார் நன்றி கூறினார்.

Next Story