வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக என்ஜினீயரிடம் ரூ.52 லட்சம் மோசடி
ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்த என்ஜினீயருக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.52 லட்சம் மோசடி செய்த வழக்கில் நைஜீரியா வாலிபர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேனி,
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள சக்கம்பட்டியை சேர்ந்த மாரிமுத்து மகன் ரமேஷ் (வயது 30). என்ஜினீயர். இவர், சிங்கப்பூரில் சில ஆண்டுகள் வேலை பார்த்து வந்துள்ளார். பின்னர், இவர் சொந்த ஊருக்கு வந்த நிலையில், ஆன்லைன் மூலம் வேலை தேடியுள்ளார்.
அப்போது ஆன்லைன் மூலம் மும்பையை சேர்ந்த ஜோர்டான் ரீவ்ஸ், ராகவ் என்ற பெயரில் 2 பேர் அறிமுகம் ஆகியுள்ளனர். அவர்கள் மின்னஞ்சல் மூலம் இந்த தொடர்பை ஏற்படுத்திக் கொண்டனர். பின்னர் ரமேசுக்கு கனடாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் தரம் சரிபார்ப்பு ஆய்வாளர் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளனர்.
வேலை வாங்கிக் கொடுக்கவும், கனடாவுக்கு விசா வாங்கி தருவதற்கும் பணம் கேட்டுள்ளனர். அதை நம்பிய ரமேஷ் அவர்கள் கொடுத்த வங்கி கணக்கில், லட்சக்கணக்கில் பணத்தை அனுப்பி வைத்துள்ளார். பின்னர், வேலைக்கான உத்தரவு வந்துவிட்டதாக கூறியதுடன், மேலும் பணம் கேட்டுள்ளனர். அதற்கும் அவர் பணம் அனுப்பி வைத்துள்ளார்.
இவ்வாறு பல தவணைகளாக ரூ.52 லட்சத்தை அனுப்பி வைத்துள்ளார். ஆனால், அந்த நபர்கள் வேலை வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளனர். இதையடுத்து அவர் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையை தொடர்ந்து ரூ.52 லட்சம் மோசடி செய்ததாக ஜோர்டான் ரீவ்ஸ், ராகவ் என்ற இருவர் மீதும், குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பரிமளாதேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது, ரமேசிடம் அறிமுகம் ஆன இருவரும் தங்களின் பெயரை மறைத்து வேறு பெயர்களில் அறிமுகம் ஆகி இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் போலீசார் துப்பு துலக்கினர்.
மோசடி செய்தவர்கள் பயன்படுத்திய மின்னஞ்சல் முகவரி, ரமேஷ் பணம் அனுப்பிய வங்கிக் கணக்கு போன்ற விவரங்களை வைத்து புலனாய்வு செய்ததில் இந்த சம்பவத்தில், நைஜீரியா வாலிபர் ஒருவரும், மும்பையை சேர்ந்த சிலரும் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மோசடி நபர்களை பிடிக்க தேவதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுல்தான்பாட்ஷா, இஸ்திரிஸ்கான் உள்பட 6 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார் மும்பையில் தேடுதல் வேட்டை நடத்தினர். தனிப்படையினரின் தீவிர முயற்சிக்கு பிறகு இந்த வழக்கில், தொடர்புடையதாக நைஜீரியா நாட்டை சேர்ந்த கேம்பல் மிலா வில்லியம் (33), மேற்கு மும்பை பகுதியை சேர்ந்த அஸ்லாம் மணிகார் மகன்கள் வஜீத் அஸ்லாம் மணிகார் (33), முகமது சபத்நூர் (32), மும்பை சோம்பாரி பஜார் பகுதியை சேர்ந்த யார்முகமது மகன் கலீது யார்முகமது (24) ஆகிய 4 பேரையும் பல்ஹார் மாவட்டம் அகர்வால் என்ற பகுதியில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மும்பையில் இருந்து தேனிக்கு கொண்டு வரப்பட்டனர். அவர்களிடம் போலீசார் நேற்று தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் கைது செய்யப்பட்ட 4 பேரும், தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story