திவாகரன் பேசுவது உளறல் என்பது தமிழக மக்களுக்கு தெரியும் டி.டி.வி.தினகரன் பேட்டி


திவாகரன் பேசுவது உளறல் என்பது தமிழக மக்களுக்கு தெரியும் டி.டி.வி.தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 2 May 2018 4:15 AM IST (Updated: 2 May 2018 3:53 AM IST)
t-max-icont-min-icon

திவாகரன் பேசுவது உளறல் என்பது தமிழக மக்களுக்கு தெரியும் என்று திருப்பூரில் டி.டி.வி.தினகரன் கூறினார்.

திருப்பூர்,

திவாகரன் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் பேசி வருகிறார். எடப்பாடி பழனிசாமி அணிக்கு ஆதரவு தெரிவிக்கிறேன். இதற்காக அம்மா அணியை உருவாக்கி உள்ளேன். தாய் கழகத்தில் சேர்ப்பதற்கு ஏஜெண்டு வேலை பார்க்கிறேன் என்று அவரே கூறுகிறார். கட்சியில் சில புல்லுருவிகள் இருந்தார்கள். இப்போது எங்கள் குடும்பத்திலும் புல்லுருவிகள் இருப்பது வெளியே தெரிகிறது. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராக பேசுகிறார். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜெயலலிதாவின் வீட்டுக்கு அவர் வந்தார். 8 மாதங்களில் அவருடைய நடவடிக்கை சரியில்லாததால் ஊருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, பொதுச்செயலாளர் சசிகலா சிறைக்கு சென்ற பிறகு, நான் துணை பொதுச்செயலாளராக பதவியேற்ற பிறகு எங்களுடைய உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிகள் மற்றும் துக்க நிகழ்ச்சிகளில் தான் திவாகரனை பார்த்திருக்க முடியும். அண்ணா பெயரில் கட்சி இல்லை. திராவிடம் இல்லை என்று அவர் பேசுகிறார். ‘நமது கழகம்’ என்ற கட்சியை எஸ்.டி.எஸ். உருவாக்கிய பிறகு மன்னார்குடியில் தொண்டர் படையில் உள்ளூர் நிர்வாகியாக திவாகரன் இருந்தார். எம்.ஜி.ஆரை எதிர்த்து அ.தி.மு.க.வை எதிர்த்து போட்டியிட்டவர் அவர். இப்போது எங்களை எதிர்க்கிறார்.

சிறையில் உள்ள அ.தி.மு.க.பொதுச்செயலாளர் சசிகலா மீது அவருக்கு கோபம். எங்கள் மீது குற்றம் சுமத்தி பேசுவதில் ஒரு சதவீதம் கூட உண்மையில்லை. என் மீது சேற்றை வாரி இறைக்கிறார். ஆனால் நான் அதை சிரித்துக்கொண்டே தட்டிவிட்டு போகிறேன். அவருக்கு பயம் இருக்கிறது. அதனால் என்னை விமர்சித்து பேசுகிறார். தன்னிடம் 25 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். 8 அமைச்சர்கள் இருக்கிறார்கள் என்று அவர் கூறுகிறார். ஆனால் யாரும் அவரிடம் இல்லை என்பது எல்லாருக்கும் தெரியும். என்னை எதிர்த்து அரசியல் செய்வதற்காக 3 மாதமாக பேசி வந்தார். பொதுச்செயலாளர் சசிகலாவை சந்திக்கும் அளவுக்கு அவருக்கு தைரியம் இல்லை.

மன்னார்குடி தொகுதியில் எப்போது தேர்தல் வந்தாலும் நாங்கள் வெற்றி பெறுவோம். எங்கள் அரசியல் பயணத்தில் எந்த பாதிப்பும் இல்லை. திவாகரனின் நடவடிக்கை காரணமாக சோழ மண்டலத்தில் எங்களுக்கு 10 சதவீதம் வாக்கு அதிகரிக்கும். தமிழ்நாட்டு மக்கள் குடும்ப அரசியலை விரும்ப மாட்டார்கள். கட்சிக்காரர்கள் தான் அதிகாரம் படைத்தவர்கள். ஆர்.கே.நகரில் 20 ரூபாய் நோட்டை காண்பித்து போராட்டம் நடத்தியவர்கள் மதுசூதனனின் கைத்தடிகளாவார்கள். திவாகரன் பேசுவது உளறல் என்பது தமிழக மக்களுக்கு தெரியும்.

கட்சி, சின்னம் வைத்து தான் ஆர்.கே.நகர் தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிட்டது. ஆனால் சுயேச்சையாக நின்று குக்கர் சின்னத்தில் நான் வெற்றி பெற்றேன். இது ஒரு உதாரணம். தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தான் உண்மையான ஜெயலலிதா ஆட்சியை தரும் என்று நினைத்து மக்கள் வாக்களிக்க உள்ளனர். காவல்துறை அரசின் ஏவல்துறையாக உள்ளது.

Next Story