மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றி விட்டு புதிதாக கட்ட வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
நரிமணத்தில் பழுதடைந்து காணப்படும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிதாக கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திட்டச்சேரி,
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் நரிமணம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 350-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு நரிமணத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.
இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு போர்வெல் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டு, நரிமணம் ஊராட்சிக்குட்பட்ட நாராணமங்கலம், சுல்லாங்கால், நரிமணம் தெற்கு தெரு, வடக்குத்தெரு, கீழத்தெரு, பெருமாள் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் அந்த மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கடந்த சில ஆண்டுகளாக பழுதடைந்து மோசமான நிலையில் காணப்படுகிறது.
தொட்டியை தாங்கி நிற்கும் தூண்களில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து அதில் உள்ள இரும்பு கம்பிகள் வெளியில் தெரியும் வகையில் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. மேலும், தொட்டியின் கீழ் பகுதியிலும் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியில் தெரிகிறது. இதனால் இந்த தொட்டி வலுவிழந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே அதிக அளவில் வீடுகள் உள்ளன. மேலும், இந்த நீர் தேக்கத்தொட்டி சாலையின் ஓரத்தில் உள்ளதால் அந்த வழியாக சென்றுவரும் பொதுமக்களும் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே, சேதமடைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றி விட்டு புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட வேண்டும் என அந்த பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story