செஞ்சி கமலக்கண்ணியம்மன் கோவில் தேரோட்டம்
செஞ்சியில் உள்ள கமலக்கண்ணியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
செஞ்சி,
செஞ்சி கோட்டையில் உள்ளது கமலக்கண்ணியம்மன் கோவில். இங்கு ஆண்டு தோறும் சித்திரை விழா 10 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினசரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது.
விழாவில் சிகர திருவிழாவான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு காலையில் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கமலக்கண்ணியம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலாவாக செஞ்சி கோட்டையில் கீழ் பகுதியில் உள்ள காளியம்மன் கோவிலை வந்தடைந்தது.
பின்னர் அங்கிருந்து பூங்கரகம் ஊர்வலமாக செஞ்சி மந்தைவெளியில் உள்ள தேர்நிலையை நோக்கி எடுத்து செல்லப்பட்டது. அப்போது செல்லும் வழியில் 2 இடங்களில் 2 எருமை மாடுகளை வெட்டி பலி கொடுத்தனர். பூங்கரக ஊர்வலம் மந்தைவெளியில் உள்ள தேர் நிலையை வந்தடைந்தவுடன், அங்கு அலங்கரிக்கப்பட்டு இருந்த தேரில் கமலக்கண்ணியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். பின்னர் தேருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
அதைதொடர்ந்து அங்கு திரண்டிருந்த திரளான பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பி, வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேர் பீரங்கி மேடு, திருவண்ணாமலை சாலை, விழுப்புரம் சாலை, சித்திரத்தெரு வழியாக வந்து மீண்டும் மந்தைவெளியில் உள்ள நிலையை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக விழாவில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் தடுக்கும் வகையில் செஞ்சி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை அறங்காவலர் அரங்க ஏழுமலை மற்றும் உபயதாரர்கள், கிராம மக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story