நெய்வேலி புதிய அனல்மின்நிலையத்தில் துணை சேவை பிரிவுகள் தொடக்கம்


நெய்வேலி புதிய அனல்மின்நிலையத்தில் துணை சேவை பிரிவுகள் தொடக்கம்
x
தினத்தந்தி 2 May 2018 5:03 AM IST (Updated: 2 May 2018 5:03 AM IST)
t-max-icont-min-icon

நெய்வேலி புதிய அனல்மின் நிலையத்தில் அமைக்கப்பட்ட துணை சேவை பிரிவுகளை என்.எல்.சி. நிறுவன தலைவர் தொடங்கி வைத்தார்.

நெய்வேலி, 

என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் 600 மெகாவாட் திறன்கொண்ட முதல் அனல் மின் நிலையம் 50 ஆண்டுகளை கடந்து இயங்கி கொண்டிருக்கிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் என்.எல்.சி. நிறுவன தேவைக்கு போக, மீதமுள்ள 546 மெகாவாட் மின்சாரம் தமிழகத்துக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த அனல்மின் நிலையத்துக்கு மாற்றாக நெய்வேலியில் ரூ.5,907 கோடி மதிப்பீட்டில் ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட புதிய அனல்மின் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக மேற்பார்வை கட்டுப்பாட்டு மற்றும் தரவு கையகப்படுத்துதல் என்ற அமைப்பு மூலம் அனல்மின் நிலையத்தில், மின்உற்பத்திக்காக பழுப்பு நிலக்கரியை தூளாக்கி எரியூட்டுதல், கழிவு பொருளான சாம்பலை கையாளுதல், நீரை கொதியூட்டி, நீராவி மூலம் டர்பனை இயக்குதல், சுவிட்ச் யார்டு உள்ளிட்ட துணை சேவை பிரிவுகள் அமைக்கும் பணிகள் முடிவடைந்தது.

இதையடுத்து புதிய அனல் மின்நிலைய வளாகத்தில் துணை சேவை பிரிவுகள் தொடக்க விழா நடந்தது. விழாவில் என்.எல்.சி. நிறுவனர் சரத்குமார் ஆச்சார்யா கலந்து கொண்டு புதிய அனல்மின் நிலைய மின்உற்பத்திக்காக துணை சேவை பிரிவுகளை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

புதிதாக அமைக்கப்பட்டு வரும் இந்த அனல்மின் நிலையத்தில் வருகிற ஜூன் மாதம் மின்உற்பத்தி தொடங்கும். இந்த அனல்மின் நிலையத்தில் இருந்து 653 மெகாவாட் தமிழகத்திற்கும், 4.2 மெகாவாட் புதுச்சேரிக்கும் மின்பகிர்மான கழகத்தின் மூலம் வினியோகிக்கப்படவுள்ளது. இதன்மூலம் ஏற்கனவே தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வந்த 546 மெகாவாட் மின்சாரத்தைக் காட்டிலும் தற்போது புதிய அனல் மின் நிலையத்தின் மூலம் கூடுதல் மின்சாரம் வினியோகம் செய்யப்படும்.

இவ்வாறு அவர் பேசினார். இதில் என்.எல்.சி. நிறுவன இயக்குனர்கள் (நிதி)ராகேஷ்குமார், (சுரங்கம்)சுபீர்தாஸ், (மின்சாரம்) தங்கபாண்டியன், (திட்டம்-திட்டமிடல்) செல்வக்குமார், (மனிதவளத்துறை)விக்ரமன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story