பெங்களூருவில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.30 கோடி மோசடி: 2 பேர் கைது
பெங்களூருவில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.30 கோடியை மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு,
பெங்களூரு ஜெயநகரில் வசித்து வருபவர் தப்ரேஷ் பாஷா(வயது 30). பிஸ்மில்லா நகரில் வசித்து வருபவர் தஷ்தாகீர்(30). இவர்கள் 2 பேரும் சேர்ந்து ஜெயநகர் 4-வது பிளாக்கில் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். இந்த நிலையில், தங்களது நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், விரைவில் முதலீட்டு பணத்துக்கு இருமடங்கு பணம் சம்பாதிக்கலாம் என கூறி வந்துள்ளனர்.
இதை நம்பிய 4 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் அவர்களின் நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர்களாக சேர்ந்து முதலீடு செய்துள்ளனர். இருப்பினும், முதலீட்டாளர்களுக்கு, அவர்கள் அறிவித்தபடி முதலீட்டு பணத்தையும், முதலீட்டுக்கான இருமடங்கு பணத்தையும் வழங்கவில்லை. இதுகுறித்து தொழில்அதிபர் நவீன் நந்தா, மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு போலீசார் நிதி நிறுவனத்தில் சோதனையிட்டு அங்குள்ள ஆவணங்களை பரிசீலனை செய்தனர்.
மேலும், மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், தப்ரேஷ் பாஷா, தஷ்தாகீர் ஆகிய 2 பேரும் நிதி நிறுவனம் நடத்தி ரூ.30 கோடி மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து தப்ரேஷ் பாஷா, தஷ்தாகீர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். நிதி நிறுவனத்தில் இருந்து வங்கி கணக்கு புத்தகங்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுபற்றி ஜெயநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story