சாமுண்டீஸ்வரி, பாதாமி தொகுதிகளில் சித்தராமையா தோல்வி உறுதி
சாமுண்டீஸ்வரி, பாதாமி தொகுதிகளில் போட்டியிடும் சித்தராமையாவின் தோல்வி உறுதி என்று அமித்ஷா பேசினார்.
சிக்கமகளூரு,
கர்நாடக சட்டசபைக்கு வருகிற 12-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா மாநிலம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் அமித்ஷா நேற்று சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரி டவுனில் மடத்திற்கு வருகை தந்தார். அங்கு மடத்தில் பராமரிக்கப்பட்டு வரும் யானைக்கு பழம் கொடுத்து ஆசி பெற்றுக் கொண்டார். அதன்பின்னர் மடத்தின் மடாதிபதி பாரதீய தீர்த்த சுவாமியை சந்தித்து அமித்ஷா ஆசி பெற்றார்.
அதன்பின்னர் சிருங்கேரி தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட் பாளர் ஜீவராஜை ஆதரித்து பிரசாரம் செய்தார். பின்னர் அங்கு நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசினார்.
இதனை தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு அமித்ஷா மூடிகெரேவுக்கு சென்றார். அங்கு மூடிகெரே தொகுதி பா.ஜனதா வேட்பாளர் குமாரசாமிக்கு ஆதரவாக அந்தப்பகுதியில் பிரசாரம் செய்தார். இதனையடுத்து மூடிகெரேயில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:-
கர்நாடகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்துள்ளேன். பொதுக்கூட்டங்களில் பா.ஜனதாவினர் சுனாமி அலைபோல திரண்டு வருகிறார்கள். இதனால் பா.ஜனதா வெற்றி பெறுவது உறுதி. காங்கிரஸ் அரசு பதவி ஏற்ற பிறகு மிளகு, பாக்கு, காபி போன்றவற்றிற்கு கொள்முதல் விலையை ஏற்றவில்லை.
எடியூரப்பா ஆட்சியில் காபி, பாக்கு போன்றவற்றிற்கு ரூ.500 கோடி செலவில் கொள்முதல் மையம் போன்றவை உருவாக்கப்பட்டது. காபி தொழிலாளிகளுக்கு நிவாரண நிதி வழங்கி உள்ளோம். கர்நாடகத்தில் 3700 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இது இந்திய அளவில் 17 சதவீதம் அதிகம்.
கடந்த 5 ஆண்டுகளில் பா.ஜனதாவை சேர்ந்த 24 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். காங்கிரஸ் பொய்யான ஆட்சிதான் நடத்துகிறது. காங்கிரஸ் தலித்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. தோல்வி பயத்தில் சித்தராமையா சாமுண்டீஸ்வரி, பாதாமி தொகுதிகளில் போட்டியிடுகிறார். அந்த 2 தொகுதிகளிலும் அவர் தோல்வி உறுதி.
கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். காங்கிரஸ் இல்லாத கர்நாடகத்தை நாங்கள் உருவாக்குவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் அமித்ஷா பாலேஹொன்னூர் மடத்திற்கு சென்று மடாதிபதிகளை சந்தித்து பேசினார்.
Related Tags :
Next Story