மின்சாரம் பாய்ச்சி வங்கி அதிகாரியை கொன்ற வழக்கு: கொலையாளிக்கு ஆவணங்கள் இன்றி ‘சிம்கார்டு’ விற்றவர் கைது


மின்சாரம் பாய்ச்சி வங்கி அதிகாரியை கொன்ற வழக்கு: கொலையாளிக்கு ஆவணங்கள் இன்றி ‘சிம்கார்டு’ விற்றவர் கைது
x
தினத்தந்தி 2 May 2018 6:51 AM IST (Updated: 2 May 2018 6:51 AM IST)
t-max-icont-min-icon

இளம்பெண் மீதான ஒரு தலைக்காதலால் மின்சாரம் பாய்ச்சி வங்கி அதிகாரியை கொன்ற வழக்கில் கொலையாளிக்கு ஆவணங்கள் இன்றி ‘சிம்கார்டு’ விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார்.

பெங்களூரு,

பெங்களூரு பனசங்கரியில் வசித்து வந்தவர் அனில் குமார்(வயது 29). இவர் எம்.ஜி.ரோட்டில் உள்ள தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வந்தார். இவருக்கும், இளம்பெண் ஒருவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில், கடந்த ஆண்டு(2017) டிசம்பர் மாதம் 4-ந் தேதி ராமநகர் மாவட்டம் ககலிபுரா பகுதியில் அனில்குமார் தனது காரில் பிணமாக கிடந்தார்.

அவருடைய உடலில் மின்சாரம் பாய்ச்சப்பட்டதோடு, அவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து ககலிபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது, அனில்குமாரை திட்டமிட்டு கொலை செய்ததாக தனியார் நிறுவன ஊழியரான சிவபசவகவுடா(32) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில், சிவபசவகவுடாவுக்கு திருமணம் ஆகி மனைவி, 2 குழந்தைகள் இருப்பதும், அனில்குமாருக்கு நிச்சயிக்கப்பட்ட இளம்பெண்ணை சிவபசவகவுடா ஒருதலையாக காதலித்து வந்ததும் தெரியவந்தது. மேலும், திருமணம் முடிந்தால் தன்னைவிட்டு இளம்பெண் பிரிந்து விடுவார் என்ற அச்சத்தில் அனில் குமாரை அவர் கொலை செய்ததும் தெரியவந்தது.

இந்த வழக்கில் ‘சிம்கார்டு‘ மூலம் துப்பு துலக்கப்பட்டது. அதாவது, அனில்குமாரின் செல்போனை ஆய்வு செய்தபோது குறிப்பிட்ட ஒரு எண்ணில் இருந்து அவருக்கு அடிக்கடி போன்கள் வந்ததும், அந்த எண் கொண்ட ‘சிம்கார்டுவை’ சிவபசவகவுடா பயன்படுத்தியதும் தெரியவந்தது. மேலும், அந்த ‘சிம்கார்டுவை‘ செல்போன் கடை நடத்தி வரும் ரவி என்பவர் கூடுதலாக பணம் பெற்று கொண்டு உரிய ஆவணங்கள் வாங்காமல் அவருக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, ரவியையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story