நீர்வளம் குறித்து ஆய்வு மேற்கொள்ள ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படுகிறது கலெக்டர் பேட்டி


நீர்வளம் குறித்து ஆய்வு மேற்கொள்ள ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படுகிறது கலெக்டர் பேட்டி
x
தினத்தந்தி 3 May 2018 3:30 AM IST (Updated: 3 May 2018 12:56 AM IST)
t-max-icont-min-icon

ஹைட்ரோ கார்பன் திட்டம் அமைக்கவில்லை, நீர்வளம் குறித்து ஆய்வு மேற்கொள்ள ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படுகிறது என்று கலெக்டர் கந்தசாமி கூறினார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர், வந்தவாசி, சந்தவாசல் உள்பட பல்வேறு இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த ஆழ்துளை கிணறுகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்படுவதாக சமூகவலைதளமான ‘வாட்ஸ் அப்’பில் பரவியது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். மேலும் பல இடங்களில் இதனை அமைக்க எதிர்ப்புகள் கிளம்பியது.

சமூகவலைதளத்தில் பரவுவது போன்று ஹைட்ரோகார்பன் திட்டத்திற்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்படவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. சமூக வலைதளங்களில் பரவும் தகவல் வதந்தி ஆகும்.

இந்த ஆழ்துளை கிணறு 300 அடி மட்டுமே போடப்படுகிறது. ஹைட்ரோ கார்பன் எடுக்க வேண்டும் என்றால் 3 ஆயிரம் அடி வரை போட வேண்டும். மேலும் ஹைட்ரோ கார்பன் பல ஆயிரம் அடிக்கு கீழ் பூமியில் கிடைக்கப்பெறும் வாயு. இந்த வாயு டெல்டா மாவட்டங்களில் தான் கிடைக்கும். அதற்கு ஏற்ற நில அமைப்பு அங்கு தான் உள்ளது. நமது மாவட்டம் கடினமான பாறைகள் கொண்டது. இங்கு ஹைட்ரோ கார்பன் என்பது கிடையாது.

இந்த ஆழ்துளை கிணறு மத்திய நீர்வளத்துறையின் நிலத்தடி நீர் ஆதார பிரிவின் கீழ் அமைக்கப்படுகிறது. இந்த பிரிவு இந்தியாவில் உள்ள பல இடங்களில் நிலத்தடி நீர் குறித்து ஆய்வு செய்கிறது. அதற்கான பல்வேறு இடங்களில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு நீர்வளம், தரம், அளவு குறித்து ஆய்வு செய்கின்றனர்.

தமிழகத்தில் திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், காஞ்சீபுரம், விழுப்புரம், கடலூர் ஆகிய 6 மாவட்டங்களில் அமைக்கப்பட்டு வருகிறது. இதுவரை 6 மாவட்டங்களில் 150 ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆக்கூர், இடையன்குளம், மாமண்டூர், புரசை, தச்சூர், கொளத்தூர் உள்பட 23 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் நீர் வளம், ஆழம் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது. இன்னும் 16 இடங்களில் அமைக்கப்பட உள்ளது.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வரப்பட்ட திட்டம் காலதாமதத்தால் தற்போது நிறைவேற்றப்பட்டு வருகிறது. நிலத்தின் மேற்பரப்பு போன்று கீழ்பரப்பின் நிலத்தடி நீரை அளவீடு செய்யப்படும். அரசு நிலங்களில் அமைக்கப்பட்ட இந்த ஆழ்துளை கிணறுகள் பஞ்சாயத்திடம் ஒப்படைக்கப்படும்.

இந்த ஆழ்துளை கிணறுகள் குறித்து தகவல் சேகரிக்கப்பட்டு இந்திய வரைபடத்தில் நிலத்தடி நீர் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story