பொது இடங்களில் மரக்கன்றுகளை நட வேண்டும் கலெக்டர் பிரபாகர் வேண்டுகோள்


பொது இடங்களில் மரக்கன்றுகளை நட வேண்டும் கலெக்டர் பிரபாகர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 3 May 2018 5:00 AM IST (Updated: 3 May 2018 1:41 AM IST)
t-max-icont-min-icon

பொது இடங்களில் மரக்கன்றுகளை நட வேண்டும் என்று கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் எஸ்.பிரபாகர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

ஈரோடு,

தொழிலாளர் தினத்தையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 225 ஊராட்சிகளிலும் நேற்று முன்தினம் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட திருவாச்சி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் கலந்துகொண்டு பேசினார்.

இதில் குடிநீர் சிக்கனம், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை, கிராம ஊராட்சி வளர்ச்சித்திட்டம், சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை திட்டம், மகளிர் திட்டம் உள்பட பல்வேறு திட்டப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

திருவாச்சி ஊராட்சி பகுதிகளில் பொதுமக்களின் கோரிக்கை அடிப்படையில் குடிநீர் குழாய் இணைப்புகள் சரிசெய்யப்பட்டு தேவையான குடிநீர் வசதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஊராட்சியில் உள்ள 1,460 வீடுகளில் 1,444 வீடுகளுக்கு தனிநபர் கழிப்பிட வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மீதமுள்ள 16 வீடுகளில் தனிநபர் கழிப்பிடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு விரைவில் முடிவடைய உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்களின் விழிப்புணர்வு காரணமாக டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய்களின் பாதிப்பு இல்லாமல் உள்ளது. கோடை காலத்தில் நம்மை பாதுகாத்து கொள்ள வீடுகளுக்கு அருகிலும், பொது இடங்களிலும் மரக்கன்றுகளை நட வேண்டும்.

சோளிபாளையம் பகுதியை சேர்ந்த ஆறுமுகத்தின் மனைவி தனலட்சுமிக்கு விதவை உதவித்தொகை வழங்கப்படும் என்றும், அவர் தத்தெடுத்து வளர்க்கும் 3-ம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு மாவட்ட கலெக்டரின் விருப்ப கொடை நிதியில் இருந்து ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்றும் கலெக்டர் பிரபாகர் அறிவித்தார்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் பாலகணேஷ், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பாலுசாமி, மகளிர் திட்ட அதிகாரி சீனிவாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story