நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் செயல்படுத்த மாட்டோம் டி.டி.வி.தினகரன் பேச்சு


நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் செயல்படுத்த மாட்டோம் டி.டி.வி.தினகரன் பேச்சு
x
தினத்தந்தி 3 May 2018 4:30 AM IST (Updated: 3 May 2018 2:56 AM IST)
t-max-icont-min-icon

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் செயல்படுத்த மாட்டோம் என்று தர்மபுரியில் அ.ம.மு.க.வில் 5,000 பேர் இணையும் விழாவில் டி.டி.வி.தினகரன் பேசினார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாற்றுக்கட்சிகளை சேர்ந்த 5,000 பேர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணையும் விழா தர்மபுரி குமாரசாமிப்பேட்டை செங்குந்தர் திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது. விழாவிற்கு கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கட்சியின் தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன், மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி இணை செயலாளர் ஆர்.ஆர்.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தர்மபுரி மாவட்ட செயலாளர் டி.கே.ராஜேந்திரன் வரவேற்று பேசினார்.

விழாவில் தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்த 5,000 பேரை வரவேற்று டி.டி.வி.தினகரன் பேசியதாவது:-

தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியை விரட்டி மக்களுக்கு பாதுகாப்பான ஆட்சியை கொண்டுவர அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தொடர்ந்து போராடும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஹைட்ரோகார்பன் திட்டம், நியூட்ரினோ திட்டம், ஸ்டெர்லைட் ஆலை உள்பட மக்கள் விரும்பாத சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த திட்டத்தையும் செயல்படுத்தமாட்டோம். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் விவசாயம் சார்ந்த தொழில்களை தொடங்க முக்கியத்துவம் அளிப்போம்.

ஜெயலலிதா ஆட்சி காலத்தில் மக்களுக்காக நிறைவேற்றப்பட்ட அனைத்து திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்துவோம். குறிப்பாக பெண்கள் எதிர்பார்க்கும் பூரண மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவோம். தற்போதைய தமிழக ஆட்சியாளர்கள் ஜெயலலிதா கொண்டுவந்த திட்டங்களையும், அவருடைய நோக்கங்களையும் மறந்துவிட்டனர். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு நாளுக்குநாள் மக்கள் ஆதரவு பெருகி வருகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்றதை போலவே 234 தொகுதிகளிலும் நாம் போட்டியிட்டு வெற்றி பெறுவோம்.

இவ்வாறு டி.டி.வி.தினகரன் பேசினார்.

விழாவில் டி.டி.வி.தினகரனுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. விழாவில் கட்சியின் அவைத்தலைவர் அன்பழகன், மகளிரணி செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி, முன்னாள் மாவட்ட செயலாளர் பூக்கடை முனுசாமி, மாநில வக்கீல் அணி செயலாளர் அசோக்குமார், மாவட்ட அவைத்தலைவர் முத்துசாமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவர் பாலு, மாவட்ட இணைசெயலாளர் சாந்தரூபி, மாவட்ட துணை செயலாளர்கள் ஏகநாதன், ராணி, மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன் மற்றும் கட்சியின் மாவட்ட, ஒன்றிய நகர நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். முடிவில் நகர செயலாளர் மணிவண்ணன் நன்றி கூறினார். 

Next Story