மழைக்காலத்தில் அனைத்து கிராமங்களிலும் ஒரே நேரத்தில்ஆலமரக்கன்றுகள் நடப்படும் கலெக்டர் தகவல்


மழைக்காலத்தில் அனைத்து கிராமங்களிலும் ஒரே நேரத்தில்ஆலமரக்கன்றுகள் நடப்படும் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 3 May 2018 4:15 AM IST (Updated: 3 May 2018 2:59 AM IST)
t-max-icont-min-icon

மழைக்காலத்தில் அனைத்து கிராமங்களிலும் ஒரே நேரத்தில் ஆலமரகன்றுகள் நடப்படும் என்று கலெக்டர் அன்பழகன் தெரிவித்தார்.

அரவக்குறிச்சி,

அரவக்குறிச்சி வட்டம், எருமார்பட்டியில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் நடைபெற்ற கிராம சுயாட்சி இயக்க விழாவின் ஒரு பகுதியாக விவசாயிகளின் நலவாழ்வு பணிமனை மற்றும் கண்காட்சி அரங்குகளை நேற்று மாவட்ட கலெக்டர் அன்பழகன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் 16 பயனாளிகளுக்கு வேளாண்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பாக ரூ.1 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பிலான வேளாண் உபகரணங்கள் மற்றும் இடுபொருட்களை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

கிராம சுயாட்சி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நாளும் கரூர் மாவட்டத்தின் 8 கிராமங்களிலும் ஒவ்வொரு துறை வாரியான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் இன்று (அதாவது நேற்று) எருமார்பட்டி கிராமத்தில் வேளாண்துறையின் சார்பாக விவசாயிகளின் நலவாழ்வு பணிமனை மற்றும் விவசாயிகள் பார்த்து பயன்பெறும் வகையில் துறை சார்ந்த கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மண் வளத்திற்கு முக்கியத்துவம் அளித்து பரிசோதனை செய்து அதற்கேற்றாற்போல் விவசாயம் செய்ய வேண்டும். அத்துடன் விதை தேர்வு மிக முக்கியம். சந்தையில் வாங்கி வந்து விதைகளை விதைக்காமல் வேளாண்துறையின் மூலம் வழங்கப்படும் தரமான விதைகளை விதைக்க வேண்டும். விளைபொருட்களை சந்தைப்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.

அதற்காக உழவன் செயலியை கைபேசி மூலம் பயன்படுத்த தெரிந்து கொள்ள வேண்டும். எந்தவொரு பொருளையும் அப்படியே விற்காமல் மதிப்பு கூட்டி விற்பனை செய்ய முன்வர வேண்டும். நமது மாவட்டத்தில் 32 கூட்டுப்பண்ணைய குழுக்களுக்கு ரூ.1 கோடியே 60 லட்சத்தில் டிராக்டர், பலர்டில்லர் உள்ளிட்ட வேளாண் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் நமது மாவட்டத்தில் 77,000 விவசாயிகளுக்கு மண்வள அட்டை பரிசோதனை செய்து வழங்கப்படுகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக திட்டத்தின் கீழ் விவசாய பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து பண்ணை குட்டை, தடுப்பணை போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. வருங்காலத்தில் வேளாண் பல்கலைக்கழகத்தின் பொறியாளர்கள் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு எந்த இடத்தில் தடுப்பணைகள் அமைத்தால் நிலத்தடி நீர் பெருகும் என்பதை ஆய்வு செய்து அதனடிப்படையில் அமைக்கப்படவுள்ளது.

சிறு, குறு விவசாயிகள் சொட்டு நீர் மற்றும் நுண்ணீர் பாசனம் அமைக்க அரசின் மானியத்தை பெற முன்வர வேண்டும். அத்துடன் கூடுதலாக தேனீ வளர்ப்பில் ஈடுபட்டால் ஒரு கிலோ ரூ.500-க்கு விற்று லாபம் பெறுவதுடன் அயல் மகரந்த சேர்க்கை நடைபெற்று மகசூல் அதிகம் பெருகும். மழைக்காலத்திற்கு முன்பாக திட்டமிடப்பட்டு மழைக்காலத்தில் அனைத்து கிராமங்களிலும் ஒரே நேரத்தில் ஆலமரகன்றுகள் நட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாம் அனைவரும் விவசாயிகளின் நண்பர்கள். அதற்காக நமது பிறந்த நாள் மற்றும் திருமண நாளில் ஒரு மரக்கன்று நட்டு வளர்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்க முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த ஆண்டு இயற்கை உரங்களை பயன்படுத்தி சிறந்த உற்பத்தியை தந்த புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த முத்துச்சாமி என்ற விவசாயி ஒருவருக்கு சிறந்த விவசாயிக்கான விருது மற்றும் ரூ.10,000 பரிசையும் கலெக்டர் வழங்கி அப்பகுதியில் ஆலமரம் ஒன்றை நட்டார்.

கிராம சுயாட்சி இயக்க பணிகளை பார்வையிடுவதற்காக கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சக இயக்குனர் கங்காதரன் தெரிவிக்கையில், கரூர் மாவட்டத்தில் விவசாயிகளின் செயல்பாடுகள் மற்றும் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி வேளாண்மை செய்வது பாராட்டுக்குரியதாக உள்ளது. மேலும் பிளாஸ்டிக் கழிவுகளை மறு சுழற்சிக்கு பயன்படுத்துவது, பிளாஸ்டிக் பயன்பாடுகளை குறைத்துக்கொள்வது போன்ற செயல்பாடுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.

இதில் அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story