கோவில் திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு காளைகளை அடக்கியவர்களுக்கு பரிசு


கோவில் திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு காளைகளை அடக்கியவர்களுக்கு பரிசு
x
தினத்தந்தி 3 May 2018 4:15 AM IST (Updated: 3 May 2018 2:59 AM IST)
t-max-icont-min-icon

அரிமளம் அருகே கல்லூரில் கோவில் திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு நடந்தது. இதில் காளைகளை அடக்கியவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

அரிமளம்,

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே கல்லூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அரியநாயகி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று முன்தினம் மது எடுப்பு திருவிழா நடந்தது. இதையொட்டி கல்லூர் செம்முனீஸ்வரர் கோவில் திடலில் நேற்று மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொள்ள புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டன. பின்னர் காளைகள் அனைத்தும் செம்முனீஸ்வரர் கோவில் திடலில் ஆங்காங்கே அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள், இளைஞர்கள் போட்டி, போட்டு அடக்கினர். சில காளைகள் மாடுபிடி வீரர்களின் கையில் சிக்கின. சில காளைகள் மாடுபிடி வீரர்களின் கையில் சிக்காமல் துள்ளிக்குதித்து ஓடின.

பரிசு

இதில் காளைகள் முட்டியதில் சிலர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் வேட்டி, துண்டு, சில்வர் பாத்திரங்கள் பரிசாக வழங்கப்பட்டது. மஞ்சுவிரட்டை அரிமளம், கல்லூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பொதுமக்கள், இளைஞர்கள் கண்டுகளித்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் உத்தரவின்பேரில் அரிமளம் போலீசார் செய்திருந்தனர். 

Next Story