அரசு பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்: எஸ்.எஸ்.எல்.சி. மாணவர் பலி; தங்கை படுகாயம்


அரசு பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்: எஸ்.எஸ்.எல்.சி. மாணவர் பலி; தங்கை படுகாயம்
x
தினத்தந்தி 3 May 2018 4:30 AM IST (Updated: 3 May 2018 2:59 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் அருகே அரசு பஸ்-மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர் பரிதாபமாக இறந்தார். அவருடைய தங்கை படுகாயம் அடைந்தார்.

மேலகிருஷ்ணன்புதூர்,

நாகர்கோவில் அருகே மேலகிருஷ்ணன்புதூரை அடுத்த கடற்கரை கிராமமான பள்ளம் அன்னை நகரை சேர்ந்தவர் பால் மோகன், மீன்பிடி தொழிலாளி. இவருடைய மனைவி அனிதா. இவர்களுடைய மகன் பெர்டினாந்து பவுல்(வயது 15)., மகள் பெரோனாதமி (13).

பள்ளிக்கூட மாணவரான பெர்டினாந்து பவுல் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதியுள்ளார். அவர் படித்து வந்த பள்ளியில்தான் அவருடைய தங்கை பெரோனாதமியும் படித்து வருகிறார். இவர் 8-ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். தற்போது கோடை விடுமுறை என்பதால் இருவரும் வீட்டில் இருந்தனர்.

பால்மோகன் உறவினர் இல்ல திருமணம் நேற்று நடைபெற்றது. இதனால் உறவினர்கள் அனைவரும் திருமண வீட்டிற்கு செல்ல தயாராகி கொண்டிருந்தனர். இந்த நிலையில் அருகில் உள்ள கடைக்கு பெர்டினாந்து பவுல் மோட்டார் சைக்கிளில் சென்றார். அவருடன் தங்கை பெரோனாதமியும் சென்றார்.

அப்போது நாகர்கோவிலில் இருந்து பள்ளத்திற்கு அரசு பஸ் ஒன்று அந்த வழியாக வந்துகொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக பஸ்சும், மோட்டார்சைக்கிளும் மோதிக்கொண்டன.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த அண்ணன், தங்கை 2 பேரும் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்து படுகாயமடைந்த பெர்டினாந்து பவுல், பெரோனாதமி ஆகிய 2 பேரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

பின்னர், பெர்டினாந்து பவுலை மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறினார்கள். இந்த தகவலை அறிந்து பெர்டினாந்து பவுலின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த விபத்து குறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே அரசு பஸ்சை ஓட்டிவந்த டிரைவர், போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்ததை தொடர்ந்து, அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story