ராமநாதபுரம் அருகே குழாயில் உடைப்பு: சாலையில் வீணாகி ஓடும் காவிரி கூட்டுக்குடிநீர்


ராமநாதபுரம் அருகே குழாயில் உடைப்பு: சாலையில் வீணாகி ஓடும் காவிரி கூட்டுக்குடிநீர்
x
தினத்தந்தி 3 May 2018 3:30 AM IST (Updated: 3 May 2018 3:07 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் காவிரி கூட்டுக்கூடிநீர் வீணாகி ஓடுகிறது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் யூனியன் மாடக்கொட்டான் ஊராட்சியில் 1000-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த நிலையில் மாடக்கொட்டானில் இருந்து மாயவரம் செல்லும் சாலையில் காவிரிகூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த ஒரு வாரமாக தண்ணீர் வீணாகி ஓடுகிறது. இதனால் மாடக்கொட்டான், மாயவரம், மேலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஒன்றிய ஜெயலலிதா பேரவை தலைவர் சபீர் கூறியதாவது:- ராமநாதபுரம் அருகே உள்ள மாடக்கொட்டான் ஊராட்சியில் நீர் நிலைகள் அனைத்தும் வறண்டு காணப்படுகின்றன. வீடுகளில் உள்ள கிணறுகளிலும் நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. இந்த பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீரும் 2 நாட்களுக்கு ஒருமுறை தான் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் குடிநீருக்காக மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

வேறு வழியின்றி லாரிகளில் கொண்டு வரப்படும் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலை இருந்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக மாடக்கொட்டான்-மாயவரம் செல்லும் மெயின் சாலையில் காவிரிகூட்டுக்குடிநீர் வீணாகி ஓடுகிறது. மாவட்டம் முழுவதும் தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் கிடைக்கும் தண்ணீரும் இவ்வாறு வீணாவது மனவேதனையை அளிக்கிறது.

இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் கண்டுகொள்ளாமல் உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story