பணகுடி அருகே பரிதாபம் கணவர் அடிக்கடி மதுகுடித்துவிட்டு தகராறு செய்ததால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை


பணகுடி அருகே பரிதாபம் கணவர் அடிக்கடி மதுகுடித்துவிட்டு தகராறு செய்ததால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 4 May 2018 2:15 AM IST (Updated: 3 May 2018 8:42 PM IST)
t-max-icont-min-icon

பணகுடி அருகே கணவர் அடிக்கடி மதுகுடித்துவிட்டு தகராறு செய்ததால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

பணகுடி, 

பணகுடி அருகே கணவர் அடிக்கடி மதுகுடித்துவிட்டு தகராறு செய்ததால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு திருமணம் முடிந்து 1½ ஆண்டுகளே ஆவதால் உதவி கலெக்டர் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூலித்தொழிலாளி 

நெல்லை மாவட்டம் பணகுடியை அடுத்துள்ள செம்பாடு கீழத்தெருவை சேர்ந்தவர் குமார்(வயது 26). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி அருள்தேவி (22). 2 பேருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்து 1 வயதில் பெண் குழந்தை உள்ளது. குமாருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் தினமும் மது குடித்துவிட்டு வந்து, தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் வேலைக்கு சரிவர செல்லாமல் ஊர் சுற்றிவந்ததாகவும், வீட்டு செலவிற்கு பணம் கொடுக்காமல் இருந்து வந்ததாகவும் தெரிகிறது. இதனை அருள்தேவி, மற்றும் குமாரின் உறவினர்கள் பலமுறை கண்டித்தனர். ஆனால் குமார் கேட்கவில்லை. தினமும் மது குடித்துவிட்டு வந்து தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். தனது கணவர் இப்படி தினமும் மது குடித்துவிட்டு வருகிறாரே என்று மிகுந்த மனவேதனையில் அருள்தேவி இருந்து வந்தார்.

தீக்குளித்து தற்கொலை 

இந்த நிலையில் கடந்த 29–ந் தேதி வழக்கம்போல் குமார் மது குடித்துவிட்டு போதையில் வீட்டிற்கு வந்தார். பின்னர் அருள்தேவியிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. பின்னர் அவர் வெளியில் சென்று விட்டார். இதில் மனவேதனை அடைந்த அருள்தேவி இனி நாம் உயிருடன் இருக்க கூடாது என்று வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து தனது உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார். இதில் ஏற்பட்ட வலியால் அருள்தேவி அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து பார்த்தனர். அப்போது அவரது உடலில் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது. உடனே அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். பின்னர் 108 ஆம்புலன்சு மூலம் அருள்தேவியை நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் நேற்று அருள்தேவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உதவி கலெக்டர் விசாரணை 

இதுகுறித்து வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கனகராஜ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார். குமாருக்கும், அருள்தேவிக்கும் திருமணமாகி 1½ ஆண்டுகளே ஆனதால் சேரன்மாதேவி உதவி கலெக்டர் ஆகாஷ் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

 கணவர் அடிக்கடி மதுகுடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததால் மனமுடைந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பணகுடி பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story