பூரண மதுவிலக்கை அமல்படுத்தகோரி தற்கொலை செய்த மாணவர் குடும்பத்துக்கு நிதி வழங்க வேண்டும் கலெக்டரிடம், காங்கிரஸ் கோரிக்கை
மாணவர் தினேஷ் நல்லசிவன் குடும்பத்துக்கு அரசு நிவாரண நிதி வழங்க வேண்டும் என நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் காங்கிரஸ் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
நெல்லை,
பூரண மதுவிலக்கை அமல்படுத்தகோரி தற்கொலை செய்து கொண்ட மாணவர் தினேஷ் நல்லசிவன் குடும்பத்துக்கு அரசு நிவாரண நிதி வழங்க வேண்டும் என நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் காங்கிரஸ் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
காங்கிரசார் மனு
நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் பொருளாளர் ராஜேஷ்முருகன், நிர்வாகிகள் சுப்பிரமணியன், வெள்ளப்பாண்டியன், சொக்கலிங்கம், ரசூல்மைதீன், மணி, மாரியப்பன், தனசிங் பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று திரண்டு வந்தனர். அவர்கள் கலெக்டர் சந்தீப் நந்தூரியை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறி இருப்பதாவது:–
சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டியை அடுத்த கே.ரெட்டியபட்டி என்ற கிராமத்தை சேர்ந்த தினேஷ் நல்லசிவன் என்ற மாணவர் நெல்லையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தன்னுடைய தந்தை மதுப்பழக்கத்து அடிமையானதால் மனம் வருந்தி அவர் தற்கொலை செய்து கொண்டார்.
பூரணமதுவிலக்கு
அவர் எழுதிய கடிதத்தில், பிரதமர் நரேந்திர மோடியும், தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார்.
எனவே நெல்லை மாவட்டத்தில் மதுபான கடைகளை மூடுவதற்கு கலெக்டர் அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். மேலும் தற்கொலை செய்து கொண்ட மாணவர் தினேஷ் நல்லசிவன் தாயார் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். அவருடைய தம்பி இசக்கிராஜ் (13) 8–ம் வகுப்பும், தங்கை தனுஸ்ரீ (11) என்ற 6–ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.
தற்போது அவர்கள் ஆதரவற்ற நிலையில் உள்ளனர். அவர்கள் 2 பேரின் எதிர்காலம் கருதி முதல்–அமைச்சர் நிதியில் இருந்து நிவாரண தொகை வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story