சங்கரன்கோவிலில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் அமைச்சர் ராஜலட்சுமி 106 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்
சங்கரன்கோவிலில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 106 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்.
நெல்லை,
சங்கரன்கோவிலில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 106 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்.
106 பேருக்கு பணிநியமனம்
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இதை தொடர்ந்து பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி கலந்து கொண்டு, 106 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இதுதவிர 4 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.14 லட்சம் மதிப்பிலான சுழல் நிதியையும் வழங்கினார்.
அமைச்சர் ராஜலட்சுமி
விழாவில், அமைச்சர் ராஜலட்சுமி பேசுகையில் கூறியதாவது:–
ஜெயலலிதா வழியில் நடைபெறும் தமிழக அ.தி.மு.க. அரசு ஏழை, எளிய மக்களுக்கு கைகொடுத்து அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் அரசாக விளங்கி வருகிறது. வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் இதுபோன்ற தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. சங்கரன்கோவிலில் நடைபெற்றுள்ள முகாமில் 25 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. 764 பேர் கலந்து கொண்டதில், 106 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு மூலம் தொழில்கள் தொடங்கும் வகையில், பல்வேறு தனித்திறன் பயிற்சிகள் மற்றும் கடன் உதவிகளும் வழங்கப்படுகிறது. தமிழக அரசின் திட்டங்களை முழுமையாக தெரிந்து கொண்டு, இளைஞர்கள் தனித்திறமைகளை வளர்த்து வேலைவாய்ப்புகளை பெற்று உங்களது பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும் உறுதுணையாக திகழ வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
19 யூனியன்களிலும்
இந்த நிகழ்ச்சியில், கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசுகைல், ‘‘வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகளை அளிக்கும் நோக்கத்தில் மத்திய அரசின் மூலம் தீன்தயாள் உபாத்யாய, கிராமின் கவுசல்யா யோஜனா திட்டத்தின் கீழ், தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. தனியார் வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட அளவில் ஏற்கனவே நெல்லையில் நடத்தப்பட்டு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது 2–வதாக சங்கரன்கோவிலில் உள்ளது. தொடர்ந்து, நெல்லை மாவட்டத்தில் உள்ள 19 யூனியன்களிலும் தனியார் துறைகள் மூலம் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும்’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில், மனோகரன் எம்.எல்.ஏ., மகளிர் திட்ட இயக்குனர் மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ, சங்கரன்கோவில் தாசில்தார் ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் கணபதி, முக்கிய பிரமுகர்கள் ஆவின் ரமேஷ், சுப்பையா பாண்டியன், ஆறுமுகம், வேல்முருகன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story