ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் சாலை மறியல்


ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 4 May 2018 4:15 AM IST (Updated: 4 May 2018 12:14 AM IST)
t-max-icont-min-icon

9 மாதங்களாக சம்பளம் வழங்காததை கண்டித்து கடலூர் நகராட்சி அலுவலகம் அருகில் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் சாலை மறியல் செய்தனர்.

கடலூர்

கடலூர் நகராட்சிக்குட்பட்ட திருப்பாதிரிப்புலியூர், கடலூர் முதுநகர் 9, 10, 11-வது வார்டுகள், கடலூர் புதுப்பாளையம், மஞ்சக்குப்பம் 1, 2, 3-வது வார்டு பகுதியில் 109 துப்புரவு தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட்டு வேலை செய்து வருகின்றனர்.

இவர்கள் நாள் ஒன்றுக்கு 7 மணி நேரம் வேலை பார்த்தால், ரூ.180 சம்பளமாக வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 3 மாதம் முதல் 9 மாதங்கள் வரை ஒப்பந்ததாரர் சம்பளம் வழங்கவில்லை என தெரிகிறது. இது பற்றி ஒப்பந்ததாரரிடம் கேட்டால், அவர் நகராட்சி அலுவலகத்தில் இருந்து நிதி வழங்கவில்லை என்று கூறி வருவதாக தொழிலாளர்கள் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை 50-க்கும் மேற்பட்ட ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்துறை ஊழியர் சம்மேளன மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நகராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் தங்களுக்கு சம்பளம் வழங்காததை கண்டித்தும், உடனடியாக சம்பளம் வழங்கக்கோரியும் நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள பாரதி சாலையில் அமர்ந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் புதுநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவியரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போக்குவரத்து இடையூறு செய்யக்கூடாது என்று போலீசார் எச்சரிக்கை செய்தனர்.

இதையடுத்து அவர்கள் அனைவரும் மறியலை கைவிட்டு நகராட்சி அலுவலகத்தில் கண்டன கோஷமிட்டனர். ஆனால் அதிகாரிகள் யாரும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாததால் நகராட்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

Next Story