ஓட்டேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் 120 பேர் கைதாகி விடுதலை


ஓட்டேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் 120 பேர் கைதாகி விடுதலை
x
தினத்தந்தி 4 May 2018 4:30 AM IST (Updated: 4 May 2018 12:47 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து 120 பேரை போலீசார் கைது செய்து விடுதலை செய்தனர்.

திரு.வி.க. நகர்,

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நேற்று நடந்தது. இதில் மத்திய அரசு சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வழக்கில் வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டில் கால அவகாசம் கேட்டது.

மேலும் வரைவு திட்டம் தயாராகிவிட்டதாகவும், கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகள் இருப்பதால் மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெற முடியவில்லை எனவும் தெரிவித்தது.

மத்திய அரசின் இந்த வாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடசென்னை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று மதியம் ஓட்டேரி பாலம் அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் எல்.சுந்தரராஜன் தலைமையில் நடந்த இந்த சாலை மறியல் போராட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், கட்சியின் செயற்குழு உறுப்பினருமான எஸ்.கே.மகேந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன் மற்றும் 20 பெண்கள் உள்பட சுமார் 150 பேர் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள் மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக கோஷமிட்டனர்.

இதனால் அந்த பகுதியில் சுமார் 45 நிமிடம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. அப்போது பயணிகளுடன் வந்த 2 மாநகர பஸ்களை போலீசார் நிறுத்தி அதில் இருந்த பயணிகளை இறக்கி மாற்று பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 120 பேரை போலீசார் கைது செய்து, அந்த பஸ்களில் ஏற்றி ஓட்டேரி மங்களபுரத்தில் உள்ள சமுதாய கூடத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

Next Story