குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் தர்ணா


குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் தர்ணா
x
தினத்தந்தி 4 May 2018 4:00 AM IST (Updated: 4 May 2018 1:00 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியில் பத்மாநகர், ஜோதிநகர், ஆதிசக்திநகர், குமரன்திருநகர், தாய்மூகாம்பிகை நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என்று அங்குள்ள மக்கள் நீண்டநாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் கலெக்டர் அலுவலகத்திலும் மனு கொடுத்தனர். எனினும், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காததால், பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் அந்த குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த மக்கள் நேற்று காலிக்குடங்களுடன், திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அப்போது குடிநீர், சாலை, தெருவிளக்கு வசதிகள் செய்து தரக்கோரி கோஷமிட்டனர். பின்னர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாமரைக்கண்ணன் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டியனை சந்தித்து மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், தங்கள் பகுதிகளுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்க வேண்டும். மேலும் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் எடுத்து விற்பனை செய்வதை தடுக்க வேண்டும். அனைத்து பொது ஆழ்துளை கிணறுகளையும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு 5 கி.மீ. தூரம் செல்ல வேண்டியது இருப்பதால் எங்கள் பகுதியில் புதிதாக ரேஷன்கடை திறக்க வேண்டும். இரவு நேரத்தில் சமூக விரோதிகளின் நடமாட்டத்தை தடுக்க போலீசார் ரோந்து வரவேண்டும். சமுதாயக்கூடம், தார்சாலை வசதி வேண்டும் என்று கூறியிருந்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்தார். அதன்பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Next Story