கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தை தி.மு.க.வினர் முற்றுகை


கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தை தி.மு.க.வினர் முற்றுகை
x
தினத்தந்தி 4 May 2018 4:30 AM IST (Updated: 4 May 2018 2:49 AM IST)
t-max-icont-min-icon

கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதி வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்,

தமிழகம் முழுவதும் 4 கட்டங்களாக கூட்டுறவு சங்க தேர்தல் நடந்து முடிந்தது. இதே போன்று பெரம்பலூர் மாவட்டத்திலும் 4 கட்டங்களாக கூட்டுறவு சங்க தேர்தல் நடந்து முடிந்தது. இந்த நிலையில், மாவட்டத்தில் உள்ள ஒரு சில கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடைபெறவில்லை. அதன்படி சில்லாங்குடி, புஜங்க ராயநல்லூர் ஆகிய 2 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு தேர்தல் இன்னும் நடக்க வில்லை. இதைத்தொடர்ந்து இந்த 2 சங்கங்களுக்கும் முறையாக தேர்தலை நடத்தக்கோரி நேற்று காலை தி.மு.க. மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் பலர் கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு கூடினர். பின்னர் அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து இணைப்பதிவாளர் அலுவலகத்திற்கு பூட்டு போடும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து பூட்டு போடும் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் மாலை 6 மணி வரை அவர்கள் கலைந்து செல்லவில்லை.

இது குறித்து அவர்கள் கூறுகையில், மேற்கண்ட 2 சங்கங்களுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 30-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அன்று காலை முதல் சங்க அலுவலகத்தில் காத்து இருந்தோம். ஆனால் தேர்தல் அதிகாரிகள் யாரும் வரவில்லை.

இந்த நிலையில் இதுவரை தேர்தல் நடக்கவில்லை. எனவே முறையாக தேர்தல் நடத்த வேண்டும். இல்லை என்றால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது அல்லது ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது என்ற ஏதாவது ஒரு தகவல் தெரிவிக்க வேண்டும். இதற்காக மண்டல இணைப்பதிவாளரை சந்தித்து முறையிட வந்தோம். ஆனால் அவர் அலு வலகத்தில் இல்லை. எனவே இதை கண்டித்தும், தேர்தலை முறையாக நடத்தக்கோரியும் முற்றுகை போராட்டம் நடத்தி உள்ளோம் என்று கூறினர். முன்னதாக அதிகாரிகளை கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பினர். இதில் தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் பாஸ்கர், நகர செயலாளர் பிரபாகர், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

Next Story