வீடு இழப்பவர்களுக்கு இழப்பீட்டு தொகையுடன் 3 சென்ட் நிலம் வழங்கப்படும் - அதிகாரிகள் தகவல்


வீடு இழப்பவர்களுக்கு இழப்பீட்டு தொகையுடன் 3 சென்ட் நிலம் வழங்கப்படும் - அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 4 May 2018 5:00 AM IST (Updated: 4 May 2018 4:02 AM IST)
t-max-icont-min-icon

விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் போது வீடுகளை இழப்பவர்களுக்கு இழப்பீட்டு தொகையுடன் 3 சென்ட் நிலம் வழங்கப்படும் என்று நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிகாரிகள் கூறினார்கள்.

கோவை,

கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய நில ஆர்ஜிதம் செய்யும் போது வீடுகளை இழப்பவர்களுக்கு இழப்பீட்டு தொகையுடன் 3 சென்ட் நிலம் வழங்கப்படும் என்று நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிகாரிகள் கூறினார்கள்.

கோவை விமான நிலையம் விரிவாக்கத்துக்காக 600 ஏக்கர் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட உள்ளது. இதற்காக இருகூர், சின்னியம்பாளையம் உள்பட சுற்று வட்டார பகுதிகளில் உள்ள வீடுகள், தொழிற்சாலைகள், விவசாய நிலங்கள் மற்றும் பள்ளி கட்டிடங்கள் உள்ள நிலங்கள் ஆர்ஜிதம் செய்யப்பட உள்ளன. அந்த நிலங்களை ஆர்ஜிதம் செய்வதற்காக பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முடிவும் எடுக்கப்பட வில்லை. ஆர்ஜிதம் செய்யப்படும் நிலங்கள் 22 பிளாக்குகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் 13 பிளாக்குகளில் உள்ள நிலங்களின் உரிமையாளர்களுடன் மாவட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி இழப்பீடு தொகையை அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இருகூர் பகுதிக்கு உட்பட்ட 9, 10, 11, 16, 17, 18 ஆகிய 6 பிளாக்குகளில் உள்ள நில உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் மாவட்ட வருவாய் அதிகாரி துரை ரவிச்சந்திரன், நில எடுப்பு ஆணையாளர் (பொறுப்பு) மற்றும் முத்திரை தாள் மாவட்ட வருவாய் அதிகாரி சிதம்பரம், தாசில்தார்கள் சியாமளா, சாந்தாமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அதிகாரிகள் கூறியதாவது:-

கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்காக ஆர்ஜிதம் செய்யப்பட உள்ள வீடு மற்றும் தொழிற்சாலை நிலங்களாக இருந்தால் அவற்றுக்கு ஒரு சதுர அடிக்கு ரூ.1500, விவசாய நிலங்களுக்கு ஒரு சதுர அடிக்கு ரூ.900 இழப்பீடு வழங்கப்படும். ஆர்ஜிதம் செய்யப்படும் இடத்தில் வீடு கட்டியவர்களுக்கு மட்டும் இழப்பீட்டு தொகை மட்டுமல்லாமல் அரசூர் கிராமத்தில் 3 சென்ட் நிலமும் வழங்கப்படும் இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதற்கு கூட்டத்தில் கலந்து கொண்ட நில உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக வீடு கட்டியவர்கள் இழப்பீடு தொகை அதிகம் தர வேண்டும் என்றும், மாற்று இடத்தில் வீடும் கட்டித் தர வேண்டும் என்றும் கூறினார்கள். தொழிற்சாலைகள் வைத்திருந்தவர்களும் கூடுதல் இழப்பீடு தொகை கேட்டு மனு கொடுத்தனர். சிலர் தங்கள் ஆட்சேபனையை எழுத்துப்பூர்வமாக மனு கொடுத்தனர். ஆலோசனைக் கூட்டத்தில் ஏராளமான நில உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story