ஆந்திராவுக்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி காருடன் பறிமுதல்


ஆந்திராவுக்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி காருடன் பறிமுதல்
x
தினத்தந்தி 4 May 2018 4:06 AM IST (Updated: 4 May 2018 4:06 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் வழியாக ஆந்திராவுக்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி மற்றும் தடை செய்யப்பட்ட 5 மூட்டை குட்கா ஆகியவற்றை காருடன் பறிமுதல் செய்யப்பட்டது.

காட்பாடி,

வேலூர் மாவட்ட கலெக்டர் ராமன் உத்தரவின்பேரில், மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார் தலைமையில், காட்பாடி தாசில்தார் ஜெயந்தி, பறக்கும்படை தாசில்தார் பழனி, காட்பாடி வட்ட வழங்கல் அலுவலர் ரவி மற்றும் குழுவினர் காட்பாடி செங்குட்டை பகுதியில் தீவிர வாகனத் தணிக்கை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது வேலூரில் இருந்து ஆந்திராவை நோக்கி வந்த ஆந்திர மாநில பதிவெண் கொண்ட ஒரு காரை நிறுத்தி சந்தேகத்தின்பேரில் சோதனை நடத்தினர். உடனே டிரைவர் தப்பி ஓடி விட்டார்.

காரில் ஒரு டன் ரேஷன் அரிசி, 40 கிலோ கோதுமை மற்றும் தடை செய்யப்பட்ட 5 மூட்டை குட்கா (பான்மசாலா) ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து, ரேஷன் அரிசியை திருவலத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோனில் ஒப்படைத்தனர்.

குட்கா மூட்டைகள் காட்பாடி வட்டார உணவுக் கட்டுப்பாட்டு அலுவலர் ரவிச்சந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டது. ரேஷன் அரிசி கடத்தலுக்குப் பயன்படுத்திய கார் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. தப்பி ஓடிய கார் டிரைவர் யார்? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story