செல்லூர் கண்மாய் தூர்வாரும் பணி தொடங்கியது


செல்லூர் கண்மாய் தூர்வாரும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 4 May 2018 5:00 AM IST (Updated: 4 May 2018 4:54 AM IST)
t-max-icont-min-icon

செல்லூர் கண்மாய் தூர்வாரும் பணிகளை ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. நேற்று தொடங்கி வைத்தார்.

மதுரை,

மதுரை நகரில் நாளுக்கு நாள் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டே செல்கிறது. எனவே நீர்மட்டத்தை உயர்த்த நகரில் உள்ள செல்லூர், வண்டியூர், மாடக்குளம் ஆகிய கண்மாய்களை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். அதில் செல்லூர் மற்றும் வண்டியூர் கண்மாய், வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் வருகிறது. எனவே இந்த 2 கண்மாய்களையும் தூர்வாரி, சீரமைக்க தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதில் முதல்கட்டமாக செல்லூர் கண்மாயை தூர்வாரும் பணிகள் நேற்று தொடங்கியது. கலெக்டர் வீரராகவராவ், மாநகராட்சி ஆணையாளர் அனீஷ் சேகர் ஆகியோர் தலைமை தாங்கினர். வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராஜன் செல்லப்பா கொடியசைத்து பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையின் அடிப்படையில் செல்லூர் கண்மாயை தூர்வாருவதற்கு ரூ.60 லட்சம் நிதி கோரப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு பெறுவதற்கு முன்பாக மாவட்ட நிர்வாகம், மதுரை மாநகராட்சி, பொதுப்பணித்துறை மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் செல்லூர் கண்மாய் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படுகிறது. முதற்கட்டமாக ஆயிரம் மீட்டர் நீளத்திற்கும், 30 மீட்டர் அகலத்திற்கும், 1 மீட்டர் ஆழத்திற்கும் தூர்வாரப்பட உள்ளது. இந்த பகுதியில் நிலத்தடி நீரினை பெருக்க வேண்டும் என்பதற்காக இந்த பணி மேற்கொள்ளப்படுகிறது. இதில் 30-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஈடுபடுத்தப்படும்.

மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. ஏழை-ஏளிய மக்கள் சுமார் ஆயிரம் பேருக்கு முதியோர் மற்றும் விதவை உதவி தொகைகள் பெற்று தரப்பட்டுள்ளது. சட்டக்கல்லூரி அமைந்துள்ள வளாகத்தில் கூடுதல் வகுப்பு மற்றும் கலையரங்கம் கட்ட சுமார் ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு பெற்று தரப்பட்டுள்ளது. 33-வது வார்டில் அம்மா திருமண மண்டபம் கட்ட நிதி ஒதுக்கீடு உத்தரவு பெறப்பட்டுள்ளது.

ரூ.3 கோடியே 50 லட்சம் செலவில் வண்டியூர் கண்மாய் தூர்வாரப்பட்டுள்ளது. புதிதாக கட்டப்பட்டுள்ள உலக தமிழ்சங்க வளாகத்தில் ரூ.10 கோடி செலவில் நூலகம் அமைக்க நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. தல்லாகுளத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ரூ.5 கோடி செலவில் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. மதுரை கலெக்டர் அலுவலகத்தில் ரூ.20 கோடி செலவில் கூடுதல் கட்டிடம் கட்டும் பணிக்கு முதல்-அமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் சுப்பிரமணியன், மக்கள் தொடர்பு அலுவலர்கள் தங்கவேலு, சித்திரவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story