நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்க சாவடிகளையும் அகற்ற வேண்டும் - வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தீர்மானம்


நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்க சாவடிகளையும் அகற்ற வேண்டும் - வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தீர்மானம்
x
தினத்தந்தி 4 May 2018 4:56 AM IST (Updated: 4 May 2018 4:56 AM IST)
t-max-icont-min-icon

நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்க சாவடிகளையும் அகற்ற வேண்டும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

ஈரோடு,

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 35-வது வணிகர் தின மாநாடு வருகிற 5-ந் தேதி சென்னையில் நடைபெறுகிறது. அன்றைய தினம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் தங்கள் கடைகளுக்கு விடுமுறை அளித்து பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டம் கருங்கல்பாளையத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஆர்.எம்.தேவராஜா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் உதயம் செல்வம் முன்னிலை வகித்தார். மாநில இணை பொதுச்செயலாளர் என்.சிவநேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

அதைத்தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

* சென்னையில் நடைபெறும் மாநாட்டிற்கு ஈரோடு மாவட்டத்தில் இருந்து 2 ஆயிரத்து 500 வணிகர்கள் செல்ல வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் குறைய புறவழிச்சாலையை விரைவில் திறக்க வேண்டும்.

* காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும். ஈரோடு மாநகரில் ஒருங்கிணைந்த காய்கறி, கனி வணிக வளாகம், குளிர்சாதன வசதியுடன் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜி.எஸ்.டி.) 5 சதவீதம், 12 சதவீதம் என இரு விகிதங்கள் மட்டுமே இருக்க வேண்டும். நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்க சாவடிகளையும் அகற்ற வேண்டும். பாதாள சாக்கடைக்காக ஈரோடு மாநகரில் குழிகள் தோண்டப்பட்ட பகுதிகளில் விரைவாக தார்ரோடு போடவேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சண்முகவேல், பொருளாளர் ராஜகோபால் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Next Story