சேலத்தில் கிராமப்புற சுகாதார செவிலியர்கள் உண்ணாவிரதம்
காலி பணியிடங்களை நிரப்பக்கோரி சேலத்தில் கிராமப்புற சுகாதார செவிலியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்
தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத்துறை கிராமப்பகுதி மற்றும் சமுதாய செவிலியர்கள் கூட்டமைப்பு சார்பில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், மக்கள் தொகை அடிப்படையில் புதிய சுகாதார துணை மையங்கள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர்கள் உஷாராணி (சேலம்) ஜானிஜகான் (நாமக்கல்) ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டமைப்பின் மாநில தலைவர் சகுந்தலா, துணை தலைவர் ரத்தினம், பொதுச்செயலாளர் சவுந்திரம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து கிராமப்புற சுகாதார செவிலியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தின்போது, துணை சுகாதார மையங்களை தனியாருக்கு அளிக்காமல் அரசே தொடர்ந்து நடத்திட வேண்டும், நான்கு கட்ட பதவி உயர்வு வாய்ப்புகளை வழங்க வேண்டும், 2,800-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், மக்கள் தொகை அடிப்படையில் புதிய சுகாதார துணை மையங்கள் அமைக்க வேண்டும், மகப்பேறு செவிலியர் கவுன்சில் கலைக்கப்படாமல் தொடர்ந்து நடத்த வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதுகுறித்து செவிலியர்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் சகுந்தலா கூறுகையில், தமிழக சுகாதாரத்துறையில் 2,800-க்கும் மேற்பட்ட சுகாதார செவிலியர்களின் காலிப்பணியிடங்கள் உள்ளன. நாடு முழுவதும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட துணை சுகாதார மையங்களை தனியார் மயம் ஆக்க போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, எங்களது நியாயமான கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும், என்றார்.
Related Tags :
Next Story