சட்டமேலவை தேர்தலில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி


சட்டமேலவை தேர்தலில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி
x
தினத்தந்தி 4 May 2018 5:10 AM IST (Updated: 4 May 2018 5:10 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய சட்டமேலவை தேர்தலில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்தன.

மும்பை,

மராட்டிய சட்ட மேலவையில் நாசிக், ராய்காட்-ரத்னகிரி-சிந்துதுர்க், உஸ்மனாபாத்-லாத்தூர்-பீட், பர்பானி-ஹிங்கோலி, அமராவதி, வார்தா-சந்திராப்பூர் ஆகிய 6 தொகுதி உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவு பெற உள்ளது.

இதையடுத்து வருகிற 21-ந் தேதி இந்த தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று, 24-ந் தேதி இதன் முடிவுகள் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இது உள்ளாட்சி அமைப்பு தொகுதிகள் என்பதால், சம்பந்தப்பட்ட தொகுதிக்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் வாக்களிக்கின்றனர்.

இந்த தேர்தலில் பா.ஜனதா மற்றும் சிவசேனா ஆகிய இரு கட்சிகளும் கூட்டணி குறித்து ஏற்கனவே உறுதி செய்தன. இரு கட்சிகளும் தலா 3 தொகுதிகளில் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டது.

இந்தநிலையில் பா.ஜனதா-சிவசேனாவின் வலுவான கூட்டணியை எதிர்கொள்ள காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஒன்றாக இணைந்தன. தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை தொடர்ந்து இரு கட்சிகளும் தலா 3 தொகுதிகளில் போட்டியிடுவது என இறுதி செய்யப்பட்டது.

இதன்படி நாசிக், ராய்காட்-ரத்னகிரி-சிந்துதுர்க் மற்றும் உஸ்மனாபாத்-லாத்தூர்-பீட் ஆகிய 3 தொகுதிகளில் தேசியவாத காங்கிரஸ் கட்சியினரும், பர்பானி-ஹிங்கோலி, அமராவதி மற்றும் வார்தா-சந்திராப்பூர் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியினரும் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, இந்த தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் ஆகும். மொத்தம் 33 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. 

Next Story