குற்ற வழக்கில் கைதாகி தலைமறைவான 2 பேர் விமான நிலையத்தில் பிடிபட்டனர்


குற்ற வழக்கில் கைதாகி தலைமறைவான 2 பேர் விமான நிலையத்தில் பிடிபட்டனர்
x
தினத்தந்தி 4 May 2018 4:00 AM IST (Updated: 4 May 2018 12:22 PM IST)
t-max-icont-min-icon

குற்ற வழக்கில் கைதாகி தலைமறைவான வாலிபர் உள்பட 2 பேர் வெளிநாடு தப்பி சென்ற நிலையில் திரும்பி வந்தபோது விமான நிலையத்தில் பிடிபட்டனர்.

ராமநாதபுரம்

கமுதி கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் என்பவரின் மகன் அறிவழகன்(வயது 45). இவர் கடந்த 2010-ம் ஆண்டு கோட்டைமேடு தேவர் சிலை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இன்ஸ்பெக்டரை தரக்குறைவாக பேசி அவரின் வாகனத்தை சேதப்படுத்தினாராம்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அறிவழகனை கைது செய்தனர். இந்த வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்த அறிவழகனுக்கு கமுதி கோர்ட்டில் கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை 3-ந்தேதி வாரண்டு பிறப்பிக்கப்பட்டது.

இதேபோல கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் மணல் அள்ளுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கமுதி முஷ்டக்குறிச்சியை சேர்ந்த ராமன் என்பவரின் மகன் மாரிமுத்து என்பவரை அறிவழகன் தாக்கியதோடு சாதியை சொல்லி திட்டினாராம்.

இதுதொடர்பாக கமுதி போலீசார் வழக்குபதிவு செய்து அறிவழகனை கைது செய்தனர். இந்த வழக்கில் அறிவழகன் கமுதி கோர்ட்டில் ஆஜராகாததால் கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் 2-ந்தேதி வாரண்டு பிறப்பிக்கப்பட்டது.

இந்த வழக்குகளில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்த அறிவழகன் வெளிநாடு தப்பி சென்றுவிட்டார். இதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் நிர்வாகத்தின் சார்பில் அறிவழகனை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து அனைத்து விமான நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சவுதிஅரேபியாவில் இருந்து நேற்று முன்தினம் அறிவழகன் டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கினார். அவரை மடக்கி பிடித்த டெல்லி போலீசார் ராமநாதபுரம் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் அறிவழகனை கைது செய்ய டெல்லி விரைந்துள்ளனர்.

இதம்பாடல் கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன் என்பவரின் மகன் தனபால்(வயது 35). இவர் கடந்த 2009-ம் ஆண்டு சிலரை தனது வேனில் ஏற்றிக்கொண்டு பரமக்குடியில் நடைபெற்ற விழாவிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பரமக்குடி அருகே இவரின் வாகனம் நிலைதடுமாறி கவிழ்ந்து உருண்டதில் மருதகத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் உதயகுமார் என்பவர் பலியானார்.

இந்த சம்பவம் தொடர்பாக பரமக்குடி நகர் போலீசார் வழக்குபதிவு செய்து வேன் டிரைவரான தனபாலை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணையின்போது தனபால் ஆஜராகாததால் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் பரமக்குடி கோர்ட்டில் வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் நிர்வாகத்தின் சார்பில் தனபாலை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து அனைத்து விமான நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்த தனபால் போலீசாருக்கு தெரியாமல் லெபனான் நாட்டிற்கு தப்பி சென்றுவிட்டார். இந்த நிலையில் அங்கிருந்து தனபால் நேற்று முன்தினம் சொந்த ஊருக்கு திரும்பி வருவதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்து இறங்கினார்.

தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுஉள்ளதால் தனபாலை சென்னை விமான நிலைய அதிகாரிகள் மடக்கி பிடித்து ராமநாதபுரம் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா உத்தரவின்பேரில் பரமக்குடி போலீசார் தனபாலை கைது செய்ய சென்னை விரைந்துள்ளனர்.

Next Story