நெல்லை அருகே பரபரப்பு: ரூ.2 லட்சம் கேட்டு தொழில் அதிபர் கடத்தல் போலீசார் தீவிர விசாரணை
நெல்லை அருகே ரூ.2 லட்சம் கேட்டு தொழிலதிபர் கடத்தப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மானூர்,
நெல்லை அருகே ரூ.2 லட்சம் கேட்டு தொழிலதிபர் கடத்தப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழில் அதிபர்
நெல்லை அருகே கட்டாரங்குளத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 35), தொழில் அதிபர். இவருடைய மனைவி கிளாடி (33). இவர் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு ஆஸ்பத்திரியில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகன் உள்ளான். சென்னையில் தனது குடும்பத்தினருடன் வசித்து வரும் ராஜேந்திரன் பங்கு மார்க்கெட்டிலும் முதலீடு செய்துள்ளார்.
கடந்த 29–ந் தேதி ராஜேந்திரனும், கிளாடியும் சொந்த ஊரான கட்டாரங்குளத்துக்கு வந்தனர். 2 நாட்கள் ஊரில் தங்கி இருந்த நிலையில், கடந்த 1–ந் தேதி அதிகாலையில் தாயார் லட்சுமியிடம் கூறிவிட்டு ராஜேந்திரன் அவசரம், அவசரமாக சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.
ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டல்
அன்று காலையில் கணவரை தேடிய கிளாடியிடம், ராஜேந்திரன் சென்னைக்கு அவசரமாக புறப்பட்டு சென்ற விவரத்தை லட்சுமி தெரிவித்தார். பதறிப்போன கிளாடி, கணவரின் செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தார். ஆனால், அவருடைய செல்போன் சுவிட்ச்– ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் பதற்றமடைந்த கிளாடி, சென்னையில் உள்ள அவருடைய நண்பர்கள், உறவினர்களிடம் விசாரித்தார். இதில், கணவர் பற்றிய தகவல் தெரியாததால், அவர் குழப்பம் அடைந்தார்.
இந்த நிலையில், அன்று இரவு 8 மணிக்கு கணவரின் செல்போன் எண்ணில் இருந்து கிளாடிக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில், ‘உனது கணவரை விடுவிக்க வேண்டுமானால் ரூ.2 லட்சம் தர வேண்டும். இல்லையேல் உனது கணவரை சிறையில் அடைத்து விடுவோம்’ என்று இருந்தது. உடனே கிளாடி தொடர்ந்து கணவர் செல்போனில் தொடர்பு கொண்டு பேச முயன்றார். அந்த செல்போன் மீண்டும் சுவிட்ச்–ஆப் செய்யப்பட்டு விட்டது.
போலீசார் தீவிர விசாரணை
இதனால் பயந்து போன கிளாடி நேற்று மானூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில், எனது கணவரை மர்ம நபர்கள் கடத்தி சென்று விட்டனர். அவரை விடுவிக்க பணம் கேட்டு மிரட்டுகிறார்கள். எனவே, அவரை மீட்டு தாருங்கள் என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார். மேலும், கடத்தப்பட்ட ராஜேந்திரனை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் நெல்லை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story