தென்காசி கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை சுப்பிரமணியபுரம் கூட்டுறவு தேர்தலை நிறுத்த வலியுறுத்தல்


தென்காசி கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை  சுப்பிரமணியபுரம் கூட்டுறவு தேர்தலை நிறுத்த வலியுறுத்தல்
x
தினத்தந்தி 5 May 2018 2:30 AM IST (Updated: 4 May 2018 7:56 PM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் உள்ள கூட்டுறவு துணைபதிவாளர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி,

உறுப்பினர் சேர்க்கையில் முறைகேடுகள் நடந்துள்ளதால், சிவகிரி அருகே சுப்பிரமணியபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு தேர்தலை நிறுத்த கோரி தென்காசியில் உள்ள கூட்டுறவு துணைபதிவாளர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் முற்றுகை 

தென்காசி பழைய பஸ் நிலையம் அருகில் கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு நேற்று காலையில் கடையநல்லூர் தாலுகா, மலையடிக்குறிச்சியை சேர்ந்த வேலுச்சாமி தலைமையில் பொதுமக்கள் திரண்டு வந்தனர். அவர்கல் அதிகாரியிடம் மனு ஒன்றை கொடுத்தனர். அதிகாரி மனுவை பெற மறுத்ததால் பொதுமக்கள் அலுவலகத்தின் வாசலில் அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் ரே‌ஷன் கார்டுகளை ஒப்படைப்பதாக கூறினார்கள். இதன் பிறகு துணை பதிவாளர் ராஜன் வேலுச்சாமி மனுவை பெற்றுக் கொண்டார்.

அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது :–

முறைகேடுகள் புகார் 

சிவகிரி தாலுகா சுப்பிரமணியபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சுப்பிரமணியபுரம், வெள்ளானை கோட்டை, ரத்தினபுரி, தாருகாபுரம், மருத நாச்சியாபுரம், சங்கனாப்பேரி, மலையடிக்குறிச்சி ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் 800–க்கும் மேற்பட்ட நபர்கள் உறுப்பினராக உள்ளனர். இங்கு 7.3.2018 முதல் 22.3.2018 வரை கூட்டுறவு சங்கங்களின் விதிமுறைகளை பின்பற்றாமல் முறைகேடுகள் செய்து குறிப்பிட்ட நபரை தலைவராக்க வேண்டும் என புதிதாக சேர்த்த 773 நபர்களை நீக்கம் செய்ய மனு கொடுக்கப்பட்டது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த உறுப்பினர்களை நீக்கம் செய்தனர்.

தேர்தலை நிறுத்த கோரிக்கை 

அதன் பிறகு வாக்காளர் பட்டியலில் தேர்தல் அலுவலர் காளி ரத்தினம், 5.4.2018 அன்று 386 புதிய உறுப்பினர்களை சேர்த்தார். 30.4.2018 அன்று மீண்டும் ஏற்கனவே நீக்கப்பட்ட மற்ற உறுப்பினர்களையும் சேர்த்துள்ளதாக கூறி தேர்தல் நடவடிக்கைகளை தொடர்ந்தனர். தற்போது இந்த கூட்டுறவு சங்க தேர்தலில் அனைத்து விதி மீறல்களும் நடந்துள்ளன. இது குறித்து அதிகாரிகளுக்கு புகார் கொடுத்துள்ளோம்.

எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஒரு குறிப்பிட்ட நபரை தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என்பதற்காக விண்ணப்பங்களை திருத்தம் செய்துள்ளனர். எனவே, நாளை மறுநாள்(7–ந் தேதி)நடைபெற உள்ள இந்த கூட்டுறவு சங்க தேர்தலை நிறுத்தம் செய்ய கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

இந்த போராட்டத்திற்கு த.மா.கா மாநில கொள்கை பரப்பு செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். முன்னாள் மலையடிக்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் கருத்த பாண்டி, அ.தி.மு.க கிளை செயலாளர் மாரி பாண்டி உட்பட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். 


Next Story