மாவட்ட செய்திகள்

போலீசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் ஐகோர்ட்டு உத்தரவு + "||" + Against the police To the case Rs 10 thousand fine Court order

போலீசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் ஐகோர்ட்டு உத்தரவு

போலீசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் ஐகோர்ட்டு உத்தரவு
போலீசாருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
சென்னை,

சென்னை, மவுலிவாக்கத்தைச் சேர்ந்தவர் ஜீவானந்தம். அசோகன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஜீவானந்தத்தை மாங்காடு போலீசார் 2006-ம் ஆண்டு கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வெளியில் வந்த ஜீவானந்தம், செங்கல்பட்டு கோர்ட்டில் மாங்காடு போலீசாருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.


அதில், ‘பொய்யான புகாரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தன்னை கடுமையாக தாக்கினார்கள். எனவே, சப்-இன்ஸ்பெக்டர் பாலாஜி, போலீசார் சிவா, பிரகாசம், தண்டலம் மோகன், முருகன், விஜயன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கில் ஜீவானந்தமோ, அவர் சார்பில் வக்கீலோ ஆஜராகவில்லை. பலமுறை வாய்ப்பு கொடுத்தும் ஆஜராகாததால் இந்த வழக்கு 2008-ம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து ஜீவானந்தம் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். ஐகோர்ட்டு விசாரணையிலும் மனுதாரர் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை.

இந்த வழக்கு நீதிபதி எம்.வி.முரளிதரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீசார் சார்பில் ஆஜரான வக்கீல், ‘மனுதாரர் பழிவாங்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். ஐகோர்ட்டிலும் அவர் ஆஜராகாததால், தேவையில்லாத செலவுகள் எதிர்மனுதாரர்களுக்கு ஏற்பட்டுள்ளது’ என்று வாதிட்டார். இதையடுத்து நீதிபதி எம்.வி.முரளிதரன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது.

பொய்யான புகாரின் அடிப்படையில் தன்னை போலீசார் கைது செய்து, கடுமையாக தாக்கியதாக மனுதாரர் குற்றம் சுமத்துகிறார். ஆனால், 2007-ம் ஆண்டு முதல் அவர் இந்த குற்றச்சாட்டை நிரூபிக்கவே இல்லை. அதனால், இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்கிறேன்.

சப்-இன்ஸ்பெக்டர் பாலாஜி உள்பட 6 பேருக்கு தலா ரூ.10 ஆயிரத்தை இழப்பீடாக மனுதாரர் வழங்கவேண்டும். இதுதவிர, மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கிறேன். அபராதம் செலுத்த தவறினால் 6 மாதம் சிறையில் அடைக்க செங்கல்பட்டு மாஜிஸ்திரேட்டு அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.