தி.மு.க.வினர் நாயிடம் மனு கொடுத்து நூதன போராட்டம்


தி.மு.க.வினர் நாயிடம் மனு கொடுத்து நூதன போராட்டம்
x
தினத்தந்தி 4 May 2018 10:30 PM GMT (Updated: 4 May 2018 7:10 PM GMT)

கூட்டுறவு சங்க தேர்தலை முறையாக நடத்தக்கோரி தி.மு.க.வினர் நாயிடம் மனு கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்

தமிழகம் முழுவதும் 4 கட்டங்களாக கூட்டுறவு சங்க தேர்தல் நடத்தப்பட்டது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்திலும் 4 கட்டங்களாக கூட்டுறவு சங்க தேர்தல் நடந்தது. இந்த நிலையில் மாவட்டத்தில் உள்ள ஒரு சில கூட்டுறவு சங்கத்திற்கு தேர்தல் நடைபெறவில்லை. எனவே கூட்டுறவு சங்க தேர்தலை முறையாக நடத்தக்கோரி தி.மு.க. மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நேற்று 2-வது நாளாக பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதி வாளர் அலுவலகம் முன்பு பலர் கூடினர். பின்னர் அங்கு பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

இதைதொடர்ந்து ஏற்கனவே அங்கு கொண்டு வரப்பட்டு இருந்த நாயிடம் கூட்டுறவு சங்க தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கை மனுவை கொடுத்து நூதன போராட்டம் நடத்தினர். இது குறித்து அவர்கள் கூறும் போது, நேற்று முன்தினம் போராட்டம் நடத்திய போது நாளை (நேற்று) பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்று தேர்தல் அலுவலர்கள் கூறினர். இதை தொடர்ந்து பேச்சுவார்த்தைக்காக கூட்டுறவு சங்க அலுவலகத்திற்கு வந்தோம். ஆனால் அலுவலர்கள் யாரும் இல்லை. எனவே இதை கண்டித்தும், தேர்தலை முறையாக நடத்த கோரியும் 2-வது நாளாக நூதன போராட்டம் நடத்தி உள்ளோம் என்று கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதைதொடர்ந்து மாலையில் கூட்டுறவு சங்க தேர்தலை முறையாக அதிகாரிகள் நடத்த கோரி தி.மு.க.வினர் திரண்டு வந்து மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமியிடம் மனு கொடுத்தனர்.

இதேபோல் லாடபுரம் பால் கூட்டுறவு சங்கத்திற்கு முறையாக தேர்தலை நடத்த கோரி சங்க அலுவலகம் முன்பு பால் உற்பத்தியாளர்கள் நேற்று காலை பாலை கொட்டி போராட்டம் நடத்தினர்.

Next Story