ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மணல் கடத்தி வந்த 7 பேர் கைது 12 லாரிகள் பறிமுதல்


ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மணல் கடத்தி வந்த 7 பேர் கைது 12 லாரிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 4 May 2018 10:15 PM GMT (Updated: 4 May 2018 7:11 PM GMT)

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மணல் கடத்தி வந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டி,

ஆந்திராவில் இருந்து உரிய அனுமதியின்றி கும்மிடிப்பூண்டி வழியாக தொடர்ந்து லாரிகளில் சென்னையின் புறநகர் பகுதிகளுக்கு மணல் கடத்தப்பட்டு வருகிறது. நேற்று அதிகாலை திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி, கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூருக்கு நேரடியாக வந்து மணல் கடத்தல் தொடர்பாக அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது ஏழுகிணறு பாலம் அருகே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன் மேற்பார்வையில் ஆரம்பாக்கம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையில் ஆந்திராவில் இருந்து உரிய அனுமதியின்றி சென்னைக்கு மணல் கடத்தி வந்த 12 லாரிகளை போலீசார் மடக்கி பிடித்து பறிமுதல் செய்தனர். இதில் 5 டிரைவர்கள் தங்களது லாரியை சாலையில் விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர்களான கொண்டமாநல்லூர் கிராமத்தை சேர்ந்த சாய்குமார் (வயது 22), சின்ன ஓபுளாபுரத்தை சேர்ந்த சுகுமார் (48) ஆந்திர மாநிலம் பெரியபனங்காடு கிராமத்தை சேர்ந்த முரளி கிருஷ்ணன் (33), ஜம்புலிங்கம்(35), பெரியவேடு கிராமத்தை சேர்ந்த அஜித்குமார்(23), வெங்கடகிரியை சேர்ந்த பாஸ்கர் (38) மற்றும் நாகலூர் கிராமத்தை சேர்ந்த ராஜா(32) ஆகியோரை கைது செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக தப்பி ஓடிய 5 லாரி டிரைவர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

Next Story