கலெக்டர் அலுவலகத்தை காலி குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை
சுகாதாரமான குடிநீர் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை காலி குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
விழுப்புரம்,
செஞ்சி அருகே சித்தேரிப்பட்டு, காரை, பெரிச்சானூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த அரசு, மோகன்ராஜ் ஆகியோர் தலைமையில் காலி குடங்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு வந்த அவர்கள் அனைவரும் திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சுகாதாரமான குடிநீர் வழங்கக்கோரி கோஷம் எழுப்பினர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்களில் குறிப்பிட்ட சிலரை மாவட்ட கலெக்டரை சந்திக்க போலீசார் அனுமதியளித்தனர். இதையடுத்து முக்கிய பிரமுகர்கள் சிலர் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியனை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
எங்கள் கிராமங்களில் சுமார் 12 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் மூலம் வீட்டு குழாய்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்த குடிநீர் மாசடைந்து உப்பு கலந்த குடிநீராக வருகிறது.
இதனை வேறு வழியின்றி பயன்படுத்தி வருவதால் 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிறுநீரகம் பாதிப்பு, கண்பார்வை இழப்பு என உடல் ரீதியாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. டாக்டர்களிடம் சென்று கேட்டதற்கு குடிநீரினால் தான் பாதிப்பு ஏற்பட்டதாக கூறுகிறார்கள்.
எனவே சுகாதாரமான குடிநீர் வழங்கக்கோரி பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனு கொடுத்து வருகிறோம். இருப்பினும் இதுவரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாசடைந்த குடிநீரை தொடர்ந்து பயன்படுத்துவதால் மேலும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குடிநீருக்காக தனியாக கிணறு வெட்டினாலும், ஆழ்துளை கிணறு அமைத்தாலும் உப்பு, சுண்ணாம்பு கலந்த குடிநீராகவே வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் இதில் உடனடியாக தலையிட்டு எங்கள் கிராமங்களுக்கு சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற கலெக்டர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து அவர்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story