மாவட்ட செய்திகள்

திருப்பூரில் நொய்யல் ஆற்றில் நுரையுடன் பாய்ந்த மழைநீர் + "||" + In Tirupur In the Noyyal river Rain water flowing with foam

திருப்பூரில் நொய்யல் ஆற்றில் நுரையுடன் பாய்ந்த மழைநீர்

திருப்பூரில் நொய்யல் ஆற்றில் நுரையுடன் பாய்ந்த மழைநீர்
திருப்பூரில் நொய்யல் ஆற்றில் நுரையுடன் மழைநீர் பாய்ந்தது. சாயகழிவுநீர் திறந்து விடப்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினார்கள்.
திருப்பூர்,

பின்னலாடை தொழில் மூலம் சிறப்பு பெற்ற திருப்பூரில் பனியன் தொழில் நிறுவனங்களும், சாயப்பட்டறைகளும் அதிக அளவில் உள்ளன. சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை பூஜ்ய சதவீத சுத்திகரிப்பு செய்து வெளியேற்ற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு அதன்படி சாயப்பட்டறையாளர்கள் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலமாக சாய கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து வருகிறார்கள். இருப்பினும் மழைக்காலங்களில் சாய கழிவுநீரை நொய்யல் ஆற்றில் திறந்து விடுவது வாடிக்கையாகவே இருந்து வருகிறது.


இந்த நிலையில் திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கொட்டித்தீர்த்த மழையால் நொய்யல் ஆற்றில் மழைநீர் அதிகமாக பாய்ந்தது. இந்தநிலையில் ராயபுரம் பெத்திசெட்டிபுரம், நடராஜா தியேட்டர் பாலத்துக்கு கீழ் நொய்யல் ஆற்றில் வெள்ளை நுரையுடன் மழைநீர் பாய்ந்தது. ஆற்றின் கரையோரம் உள்ள புல்வெளிகளில் நுரை அதிகமாக படிந்திருந்தது. காற்றில் வெள்ளை நுரை பறந்தது. நொய்யல் ஆற்றில் பாய்ந்த மழை வெள்ளமும் நுரையோடு பாய்ந்தது. இதை அந்த பகுதியில் உள்ளவர்கள் நேற்று காலை திரண்டு வந்து பார்த்தனர்.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறும்போது, “சாயகழிவுகள் ஆற்றில் திறந்து விடும் காலங்களில் நொய்யல் ஆற்றில் நுரையோடு தண்ணீர் பாய்ந்து வருகிறது. குறிப்பாக இரவில் மழை பெய்து நொய்யல் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுக்கும் காலங்களில் எல்லாம் சாயகழிவுகளை ஆற்றில் திறந்து விடுவது வாடிக்கையாகி போனது. இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தால் சோப்பு நுரை என்று தெரிவிக்கிறார்கள். மழை பெய்யும் நாட்களில் மட்டும் இவ்வாறு அதிக அளவு நுரை எப்படி வருகிறது. இதுகுறித்து மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். நொய்யல் ஆற்றை தூய்மைப்படுத்தும் பணி ஒருபுறம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மறுபுறம் சாயகழிவுநீரை இரவு நேரங்களில் திறந்து விட்டு விடுகிறார்கள். இதற்கு கடுமையான நடவடிக்கை இருந்தால் மட்டுமே நொய்யல் ஆற்றில் சாயகழிவுநீர் கலப்பதை தடுக்க முடியும்“ என்றனர்.