மாவட்ட செய்திகள்

பொள்ளாச்சி அருகே வறட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டது: தடுப்பணை கட்டாததால் தண்ணீர் வீணாகியது + "||" + Flooding in varattar Water was wasted because of no obstruction

பொள்ளாச்சி அருகே வறட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டது: தடுப்பணை கட்டாததால் தண்ணீர் வீணாகியது

பொள்ளாச்சி அருகே வறட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டது: தடுப்பணை கட்டாததால் தண்ணீர் வீணாகியது
பொள்ளாச்சி அருகே பலத்த மழையின் காரணமாக வறட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டது. தடுப்பணை கட்டாததால் தண்ணீர் வீணாக கேரளாவுக்கு சென்று கடலில் கலக்கிறது.
பொள்ளாச்சி,

பொள்ளாச்சி அருகே பெரும்பதி, ஜமீன்காளியாபுரம், நடுப்புணி வழியாக வறட்டாறு செல்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே தடுப்பணை இல்லாததால் மழைக்காலங்களில் ஆற்றில் ஓடும் தண்ணீர் கேரளாவுக்கு சென்று வீணாக கடலில் கலக்கிறது. ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என்று நீண்ட காலமாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இன்னும் தடுப்பணை கட்டவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கன மழை பெய்தது. மழையின் காரணமாக பெரும்பதியில் உள்ள வறட்டாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. அங்குள்ள தரை மட்ட பாலத்தை தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. 15 ஆண்டுகளுக்கு பிறகு ஆற்றில் வெள்ளப் பெருக்குஏற்பட்டதால், அந்த பகுதி பொதுமக்கள், விவ சாயிகள் மகிழ்ச்சி அடைந்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.


இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

பொள்ளாச்சி அருகே பெரும்பதி வழியாக வறட்டாறு ஓடுகிறது. இந்த ஆற்றின் மூலம் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு தாலுகாக்கள் பயன்பெறுகின்றன. வடக்கு ஒன்றியத்தில் மிகப்பெரிய ஊராட்சியான புரவிபாளையமும், கிணத்துக்கடவு ஒன்றியத்தில் மிகப்பெரிய ஊராட்சியான சொக்கனூர் ஊராட்சி பகுதிகள் அதிகம் பயன்பெறுகின்றன. புரவிபாளையம் ஊராட்சியில் 60 முதல் 70 ஏக்கரும், சொக்கனூர் ஊராட்சியில் 50 ஏக்கரும் பாசன வசதி பெறுகின்றன.

இதை தவிர பெரும்பதி, முத்துக்கவுண்டனூர், பாலாறுபதி ஆகிய கிராமங்களின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படுகிறது. ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி தண்ணீரை தேக்கி வைக்க வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக பொதுப்பணித்துறை தலைமை பொறியாளருக்கு மனு கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் இன்னும் தடுப்பணை கட்டும் பணிகள் தொடங்கவில்லை.

இந்த நிலையில் நேற்று (நேற்று முன்தினம்) பெய்த மழைக்கு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. 100 அடி அகலமுள்ள ஆற்றில் 15 அடி உயரத்துக்கு தண்ணீர் சென்றது. காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை ஆற்றில் தண்ணீர் சென்றது. சுமார் 4 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கேரளா வழியாக அரபிகடலுக்கு சென்று விட்டது.

தற்போது கடும் வறட்சி நிலவுவதால் பாசனத்திற்கு தண்ணீர் இல்லை. இதனால் தென்னை மரங்கள் உள்பட காய்கறி பயிர்கள் கருகி விட்டன. குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டு உள்ளது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தடுப்பணை கட்டி இருந்தால் வீணாக கடலுக்கு சென்ற தண்ணீரை தேக்கி வைத்திருக்கலாம். இதன் மூலம் சுமார் 100 ஏக்கர் பாசன வசதி பெற்றிருக்கும். கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து இருக்கும். இதன் மூலம் பெரும்பதி உள்ளிட்ட கிராம மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு இருக்கும். எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதேபோன்று பொள்ளாச்சி பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக தடுப்பணைகள் நிரம்பின. கிணத்துக்கடவு, சொலவம்பாளையம், நெ.10 முத்தூர், சூலக்கல், நல்லட்டிபாளையம், தேவராயபுரம், சொக்கனூர், சிங்கையன்புதூர் ஆகிய பகுதிகளில் பெய்த மழையால் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

இதனால் சொலவம்பாளையம், தாமரைக்குளம், அரசம்பாளையம், கொண்டம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட குட்டைகள் நிரம்பி வழிந்தன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.